வேலூர் மக்களவை தேர்தலையொட்டி பாதுகாப்பு பணிக்கு 2 கம்பெனி துணை ராணுத்தினர் வருகை: இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

வேலூர்: வேலூர் மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 180 பேர் கொண்ட 2 கம்பெனி துணை ராணுவத்தினர் நேற்று வேலூர் வந்தனர். வேலூர் மக்களவை தேர்தல் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 11ம் தேதி தொடங்கியது. 19ம் தேதி வேட்பு மனு பரிசீலனை முடிந்தது. திமுக சார்பில் சார்பில் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உட்பட 50 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். 19ம் தேதி நடந்த வேட்புமனு பரிசீலனையில் 19 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட 31 மனுக்கள் ஏற்கப்பட்டன. இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதனிடையே அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க, பறக்கும்படையினர், நிலைக்கண்காணிப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்படும் பணத்தை பறிமுதல் செய்கின்றனர்.

இதனிடையே மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 2 கம்பெனி துணை ராணுவத்தினர் வந்தனர். இதில் சென்னை மத்திய தொழிற்பாதுகாப்பு படையை சேர்ந்த 90 துணை ராணுவத்தினர் நேற்று முன்தினம் நள்ளிரவு வேலூர் வந்தனர். இவர்கள் கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் நெய்வேலியில் இருந்து 90 துணை ராணுவத்தினரும் நேற்று முன்தினம் இரவு வேலூர் வந்தனர். இவர்கள் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதையொட்டி அரியூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்கியுள்ளனர்.

× RELATED வேலூரில் திமுகவுக்கு கிடைத்த வெற்றி...