×

ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு சதுரகிரி மலையேற 6 நாட்கள் அனுமதி

பேரையூர்: ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு சதுரகிரி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 6 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. மதுரை மாவட்டம், பேரையூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் உள்ளது. வரும் 31ம் தேதி ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு மலைக்கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள். இதற்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியில், கலெக்டர்கள் ராஜசேகர் (மதுரை), சிவஞானம் (விருதுநகர்) தலைமையில் நேற்று நடந்தது. இதில் எஸ்பிக்கள் மணிவண்ணன் (மதுரை), ராஜராஜன் (விருதுநகர்) மற்றும் வனத்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்: சதுரகிரி மலைக்கோயிலில் ஆடி அமாவாசை திருவிழாவிற்காக ஜூலை 27ம் தேதி முதல் ஆக. 1ம் தேதி வரை 6 நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். அதற்கு மேல் மலையேற அனுமதியில்லை. மலையேறும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பிடம், போக்குவரத்து வசதிகள், மலை உச்சியில் அன்னதானக்கூடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விபத்து மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டோரை தூக்கி வருவதற்காக 30 டோலிகள் தயார் நிலையில் உள்ளன. மலையேற நுழைவுச்சீட்டு (கட்டணம் ரூ.5) தாணிப்பாறை அடிவாரத்தில் வழங்கப்படும். கூட்ட நெரிசல் ஏற்பட்டால் ஒரு சில இடங்களை தேர்வு செய்து நுழைவுச்சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தாணிப்பாறையில் இருந்து 7 கிமீ தொலைவில் மகாராஜபுரம் அருகே 10 ஏக்கரில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு பேருந்துகள் நிறுத்தி வைக்கப்படவுள்ளது. அங்கிருந்து தாணிப்பாறைக்கு கட்டணமின்றி பஸ்கள் இயக்கப்படும். டூவீலர்கள் மற்றும் வாகனங்கள் நிறுத்தவும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மலையேறும் பக்தர்கள் தீப்பெட்டி மற்றும் வெடிக்கக்கூடிய பொருட்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை. சுகாதாரத்துறையின் தற்காலிக மருத்துவ முகாம்கள் தாணிப்பாறை, வாழைத்தோப்பு அடிவார பகுதிகளிலும், மலையில் சில இடங்களிலும் அமைக்கப்பட உள்ளது. மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து இயக்கப்படும் தாணிப்பாறை சிறப்பு பேருந்துகள் மாலை 4 மணியுடன் நிறுத்தி வைக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Tags : Adi, moon
× RELATED தலிபான்கள் அரசுக்கு உதவிக்கரம்...