×

நீட் விலக்கு மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தமிழக அரசுக்கு மத்திய அரசு தெரிவிக்கவில்லை: அமைச்சர் சி.வி.சண்முகம்

சென்னை: நீட் விலக்கு மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தமிழக அரசுக்கு மத்திய அரசு தெரிவிக்கவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேரவையில் கூறியுள்ளார். மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கப்பட்டதை அடுத்து, நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதாக்கள் கடந்த 2017ம் ஆண்டு  தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கை சட்டம், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை சட்டம் என்ற அந்த இரு சட்ட மசோதாக்களும் ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த இரு சட்ட மசோதாக்களுக்கும் ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளித்து தமிழக அரசு இயற்றிய இரு சட்ட மசோதாக்களும் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது. இதனால் அந்த இரண்டு மசோதாக்கள் தமிழக அரசுக்கு 2017ம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பி விட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய எதிர்க்கட்சித்தலைவர் மு.க ஸ்டாலின், இரு மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டு 21 மாதங்களுக்கு மேல் ஆகியுள்ளது. ஆனால், தமிழக அரசு இதனை மறைத்துள்ளது. புதிதாக மீண்டும் புதிய இரண்டு மசோதாக்களை நிறைவேற்ற குடியரசுத் தலைவருக்கு எப்போது அனுப்பி வைப்பீர்கள்?, என்று கேள்வி எழுப்பினார்.

இதற்க்குப் பதிலளித்துப் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம், எந்த தகவலையும் தமிழக அரசு, இந்த அவைக்கு மறைக்கவில்லை. திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களில், நிறுத்தி வைப்பு என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. காரணங்கள் என்ன? என்று கேட்டு கடிதம் எழுதியிருக்கிறோம். காரணங்கள் தெரிந்தால் மட்டும் தான் திருத்தி அனுப்ப முடியும். இதுவரை, மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாக தமிழக அரசுக்கு எந்த தகவலையும் மத்திய அரசு தெரிவிக்கவில்லை. உயர்நீதிமன்றத்தில் தான் மத்திய அரசு பதிலாக அளித்துள்ளதே தவிர தமிழக அரசின் கடிதத்துக்கு பதிலளிக்கவில்லை. மேலும், நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதாவை சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்ற தயார். தமிழக அரசின் கடைசி நினைவூட்டல் கடிதத்துக்கு மத்திய அரசிடம் இருந்து பதில் வராவிட்டால் வழக்கு தொடர தமிழக அரசு தயாராக உள்ளது, என்று அவர் கூறியுள்ளார்.


Tags : NEED Bill, Government of Tamil Nadu, Central Government, CVShanmugam, MK Stalin
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்