ஆசிரியரின் சம்பள நிலுவையை வழங்க ₹5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கல்வி அதிகாரி கைது: உதவியாளரும் சிக்கினார்

தர்மபுரி: தர்மபுரியில் அரசு பள்ளி ஆசிரியரின் சம்பள நிலுவையை வழங்க, ₹5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய, தர்மபுரி வட்டார கல்வி அலுவலர், உதவியாளர் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பங்குநத்தம் பகுதியை சேர்ந்தவர் மீனா (40). இவர் சிக்கம்பட்டி அரசு நடுநிலை பள்ளியில், பட்டதாரி ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி முதல் மே வரை (4 மாதம்) மருத்துவ விடுப்பு எடுத்திருந்தார். கடந்த மாதம் 17ம் தேதி மீண்டும் பணியில் சேர்ந்தார். அவருக்கு சம்பளம் ஏப்ரல், மே மாதம் நிலுவையில் இருந்தது. அந்த 2 மாத நிலுவைத்தொகையை வாங்க, தர்மபுரி வட்டார கல்வி அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார்.

 ₹5ஆயிரம் லஞ்சம் கொடுத்தால்தான், இரண்டு மாத சம்பள நிலுவைத் தொகை வழங்க முடியும் என்று உதவியாளர் குமரேசன் தெரிவித்துள்ளார். இதுபற்றி ஆசிரியை மீனா, தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசாரின் ஆலோசனையின் பேரில், நேற்று உதவியாளர் குமரேசனிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஆசிரியை மீனா கொடுத்தார். அதில் உதவியாளர் குமரேசன் ₹2 ஆயிரம் எடுத்துக்கொண்டு, ₹3 ஆயிரத்தை வட்டார கல்வி அலுவலர் மேரி சகாய ராணியிடம் அளித்தார். அப்போது மறைந்திருந்த தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார், இருவரையும் கைது செய்தனர். வட்டார கல்வி அலுவலர் மேரி சகாய ராணி ஓய்வு பெற இன்னும் 3மாதங்கள் இருந்த நிலையில் லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.


Tags : Female education officer, arrested , accepting 5 thousand bribe ,teacher's,salary
× RELATED திருவனந்தபுரம் ரயில்நிலையத்தில்...