×

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை: ஐகோர்ட் அனுமதி

சென்னை: சரவணபவன் ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு உடல்நிலை மோசமானதால் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்க்க அனுமதிக்கோரி ராஜகோபால் மகன் மனு தாக்கல் செய்த நிலையில், நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியுள்ளது. கொலை வழக்கு தொடர்பாக, ஏற்கனவே உயர்நீதிமன்றம் அளித்திருந்த உத்தரவை எதிர்த்து ராஜகோபால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் உயர்நீதிமன்றம் அளித்திருந்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அவரை உடனடியாக சரணடைய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்த 9ம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூடுதல் நீதிமன்ற அமர்வில் ஆஜரானார். உடல்நிலை குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது, அவரை சிறையில் அடைக்க சம்பத்தப்பட்ட நீதிபதி உத்தரவிட்டிருந்தார். சிறைக்கு செல்லும் போதே அவருடைய உடல்நிலை பாதிக்கபட்டிருந்தது. அதன் காரணமாக அவர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், கடந்த 13ம் தேதி இரவு 11 மணியளவில் அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவரது உடல் நிலை மிகவும் மோசமானது. உடனடியாக வெண்ட்டிலேட்டர் இயந்திரம் மூலம் செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, இந்த சிகிச்சை போமானது அல்ல என்றும், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனக்கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஸ்டான்லி மருத்துவமனையில் ராஜகோபாலுக்கு அளித்து வரும் சிகிச்சை குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. பிறகு, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ராஜகோபாலுக்கு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் போதுமான சிகிச்சை வழங்கி வருவதாக வாதிட்டார். தற்போது அவர், மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்றம் செய்வதில் சிக்கல் ஏற்படும் எனவும் வாதிடப்பட்டது.

அதேசமயம், மனுதாரர் தரப்பில் ராஜகோபாலை மருத்துவமனைக்கு அழைத்து செல்வது, அவருக்கு சிகிச்சை அளிப்பது போன்ற செலவுகளுக்கு தாம் ( ரகோபால் மகன்) பொறுப்பேற்பதாக கூறியிருந்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கியுள்ளது. மேலும் வழக்கு விசாரணை 3 வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ராஜகோபால் வடபழனியில் இருக்கும் விஜயா என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Rajagopal, Private Hospital, Treatment, Icort, Permission
× RELATED கவர்ச்சிக்கரமான அறிவிப்புகள் மூலம்...