கேரளாவில் பருவமழை 43 சதவீதம் குறைவு

திருவனந்தபுரம்: கேரளாவில் இவ்வருடம் தென்மேற்கு பருவமழை 43 சதவீதம் குறைந்துள்ளது. கேரளாவில் வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் வரை பெய்யும். இவ்வருடம் ஒருவாரம் தாமதமாக ஜூன் 8ம் தேதி தான் பருவமழை தொடங்கியது. ஆனால் தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே மழையின் தீவிரம் குறைய தொடங்கியது.திருவனந்தபுரம், கொல்லம் உட்பட தென்மாவட்டங்களில் மட்டுமே ஓரளவு மழை பெய்தது. வடமாவட்டங்களில் மிகவும் சுமாராகவே மழை பெய்தது. இதன் காரணமாக இடுக்கி, முல்லைப் பெரியாறு உட்பட பெரும்பாலான அணைகளில் நீர்மட்டம் மிகவும் குறைந்துள்ளது.

வழக்கமாக ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 10ம் தேதி வரை கேரளாவில் சராசரியாக 890 மி.மீ. மழை பெய்ய வேண்டும். ஆனால் இவ்வருடம் இதுவரை 510 மி.மீ. மழையே பெய்துள்ளது. இடுக்கி, வயநாடு மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களில் 50 சதவீதத்திற்கும் குறைவாக மழை பெய்துள்ளது. வரும் 14ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பில்லை என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதே நிலை நீடித்தால் வரும் நாட்களில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் மின் மின்பற்றாக்குறை ஏற்படும்.


Tags : Monsoon, Kerala
× RELATED தென்மேற்கு பருவ மழை விடைபெற்றது...