×

பருவமழையால் விளைச்சல், வரத்து அதிகரிப்பு கிழங்குவகை காய்கறிகள் விலை குறைந்தது: சேனை கிலோ ரூ.20க்கு விற்பனை

நெல்லை: கடந்த  அக்டோபர், நவம்பரில் பெய்த வடகிழக்கு பருவமழையால் இந்தாண்டு பொங்கல்  பண்டிகைக்கு கிழங்கு மற்றும் காய்கறிகள்  விளைச்சல் மற்றும் வரத்து  அதிகரித்துள்ளது. நெல்லையில்  சேனை கிலோ ரூ.20க்கும், கருணை ரூ.24, சேம்பு  ரூ.35 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழா வரும் 14ம் தேதி  கொண்டாடப்படுகிறது.   கடந்த அக்டோபர், நவம்பரில் பெய்த வடகிழக்கு பருவமழையால் இந்தாண்டு  பொங்கல்  பண்டிகைக்கு கிழங்கு மற்றும் காய்கறிகள்  விளைச்சல் மற்றும்  வரத்து  அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நெல்லையில் கிழங்கு வகைகள் மற்றும்  காய்கறிகள் விலை சராசரியாக விற்பனை செய்யப்படுகிறது.

நெல்லை மாநகர  பகுதியில் பாளை, மேலப்பாளையம், டவுன் கண்டியப்பேரி உழவர்சந்தைகள் மற்றும்  பாளை காந்தி மார்க்கெட், தச்சை மொத்த காய்கறி மார்க்கெட், டவுன் காய்கறி  சந்தைகளில்  பொங்கல் விற்பனைக்கான காய்கறிகள் நேற்றும் லாரிகள் மற்றும்  வாகனங்களில் அதிக அளவில் வந்திறங்கின. பாளை மகாராஜநகர் உழவர்சந்தையில்  நேற்றுமுன்தினம் ஒரேநாளில 40 டன் காய்கறிகள் விற்பனையானது. நேற்று 45 டன்  காய்கறிகள், விற்பனைக்கு வந்து குவிந்தன. இன்று காய்கறிகள் வரத்து மேலும்  அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர். நேற்று முன்தினத்தைவிட  சிறு கிழங்கு,  சேனை, சேம்பு, கருணை, சீனிக்கிழங்கு, வள்ளிக்கிழங்கு, பிடிகிழங்கு,  காய்ச்சி கிழங்கு போன்ற கிழங்கு வகைகள் வரத்து நேற்று அதிகமாக இருந்தது.

இதனால்  இவற்றின் விலையும் குறைந்தது. சேனை கிலோ ரூ.20க்கு விற்கப்படுகிறது.  கருணை ரூ.24, சேம்பு ரூ40ல் இருந்து ரூ.35ஆக குறைந்துள்ளது., சிறு கிழங்கு  நேற்றைய விலையை விட ரூ.5 குறைந்து ரூ.45 மற்றும் 50க்கும், சீனி கிழங்கு  ரூ.18,  வள்ளி, பிடிகிழங்கு 10 ரூபாய் குறைந்து ரூ.35 என்ற விலையிலும்  விற்பனை செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டுவந்து குவித்துள்ளனர். தலைப்பொங்கல்  கொண்டாடும் தம்பதிக்கு பொங்கல் படி கொடுப்பதற்காக பொதுமக்கள், அதிக அளவில்  காய்கறிகளை வாங்கிச் சென்ற வண்ணம் உள்ளனர். பாளை மகாராஜநகர் உழவர்சந்தை,  கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக அன்புநகர் ரயில்வே கேட் அருகில் 2  பூங்காக்களில் செயல்படுகிறது. மகாராஜநகர், மேலப்பாளையம் உழவர்சந்தையில் விலைப்பட்டியலை  விட சில வியாபாரிகள் சில குறிப்பிட்ட காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்பனை  செய்வதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு  செல்லப்பட்டு கண்காணித்தனர்.

Tags : Monsoon, yield, increase in supply, sale of tuber vegetables
× RELATED தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களுக்கு இன்று...