×

பரங்கிமலை ராணுவ மைதானம் அருகே கேட்பாரற்று நின்ற வேனில் 350 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

ஆலந்தூர்: சென்னை பரங்கிமலை ராணுவ மைதானம் அருகே வடக்கு பரேடு சாலையில் கடந்த 3 தினங்களாக ஒரு வேன் கேட்பாரற்று கிடப்பதாக பரங்கிமலை ரோந்து போலீஸ் எஸ்.ஐக்கள் குருபரன், உஷா ஆகியோருக்கு தகவல் வந்தது.  இதனையடுத்து ரோந்து போலீசார் அங்கு சென்று வேனை சோதனை செய்தபோது பாக்கெட், பாக்கெட்டாக கஞ்சா இருந்தது. இதனையடுத்து அந்த வேனை கைப்பற்றி பரங்கிமலை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று இன்ஸ்பெக்டர் வளர்மதியிடம் ஒப்படைத்தனர். இதனை பரங்கிமலை துணை கமிஷனர் முத்துசாமி, உதவி கமிஷனர் கோவிந்தராஜ், இன்ஸ்பெக்டர்  வளர்மதி ஆகியோர் சோதனை செய்தபோது இதில் சுமார் 350 கிலோ எடை கொண்ட 150 கஞ்சா பாக்கெட்டுகள் ஒரு பெட்டியில் இருந்தது தெரியவந்தது. மேலும் கஞ்சாவை கடத்தி வந்த வேன் உரிமையாளர் யார்? என்பது தெரியவில்லை. இந்த  வேன் இதுவரை 6 பேருக்கு விற்கப்பட்டதும் தெரிய வந்தது. ஆனால் இதுவரை 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த வேன் மூலமாக பல வருடங்களாக கஞ்சா கடத்தப்பட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விற்கப்பட்டு இருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் கஞ்சா எங்கிருந்து கடத்தப்பட்டு பரங்கிமலை பகுதிக்கு வந்தது?  இதனை கொண்டு வந்தவர்கள் மற்றும் இதன் பின்னனியில் யார்? என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Paranagamalai, Military Ground, 350kg , cannabis
× RELATED விழுப்புரம் அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது