×

சர்ச்சைக்குரிய வகையில் இனி பேசக்கூடாது இயக்குநர் ரஞ்சித்துக்கு நிபந்தனை முன்ஜாமீன்: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

மதுரை:  சர்ச்சைக்குரிய வகையில் இனி பேசக்கூடாது என்ற நிபந்தனையுடன் இயக்குநர் ரஞ்சித்துக்கு, ஐகோர்ட் கிளை முன்ஜாமீன் வழங்கியது. தஞ்சை மாவட்டம், திருப்பனந்தாளில் கடந்த 5ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் மன்னர் ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, திரைப்பட இயக்குநர் ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து தனக்கு முன்ஜாமீன் கோரி இயக்குநர் ரஞ்சித், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பி.ராஜமாணிக்கம் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், ‘‘மனுதாரர் இரு பிரிவினரிடையே பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே, முன்ஜாமீன் வழங்கக்கூடாது’’ என கூறப்பட்டது.

மனுதாரர் வக்கீல் லஜபதிராய் ஆஜராகி, ‘‘பல்வேறு புத்தகங்களில் கூறப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையிலேயே ரஞ்சித் பேசினார். ஜூன் 6ல் நடந்த நிகழ்ச்சிக்கு ஜூன் 11ல் தான் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மனுதாரர் பேசியதால், இதுவரை எந்த பிரச்னையும் ஏற்படவில்லை’’ என்றார். ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவாகவும் இரு துணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியதில்லை. எனவே, அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர், இனிமேல் இதுபோன்று சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது. கும்பகோணம் ஜேஎம் 1 மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி, 2 நபர் ஜாமீன் உத்தரவாதம் தாக்கல் செய்து ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என கூறியுள்ளார்.



Tags : Controversially, Director Ranjith,Madurai Branch
× RELATED மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு...