×

ஆதிக்கத்தை தொடர இந்தியா உறுதி: பாகிஸ்தானுடன் இன்று மோதல்

மான்செஸ்டர்: உலக கோப்பை ஆட்டங்களில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற சாதனையை தக்கவைத்துக் கொள்ளும் உறுதியுடன் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இன்று களமிறங்குகிறது.நடப்பு உலக கோப்பை தொடரில் ரசிகர்கள் அதிக ஆவலுடன் எதிர்பார்ப்பது இந்தியா - பாகிஸ்தான் மோதலைத் தான். பட்டம் வெல்லும் முனைப்புடன் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் தென்  ஆப்ரிக்காவையும், அடுத்து நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியையும் வீழ்த்தி அசத்தியது. அடுத்து நியூசிலாந்து அணியுடன் நடக்க இருந்த லீக் ஆட்டம் கனமழை காரணமாக கைவிடப்பட்டது. 5 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ள இந்திய அணி, தனது 4வது லீக் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தான் அணியை சந்திக்கிறது. மான்செஸ்டர், ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3.00  மணிக்கு தொடங்குகிறது.

தொடக்க வீரர் தவான் காயம் அடைந்துள்ளதால் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல், ரோகித் ஷர்மாவுடன் இணைந்து இன்னிங்சை தொடங்க உள்ளார். 4வது வீரராக தினேஷ் கார்த்திக் அல்லது விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நல்ல பார்மில் உள்ள இந்திய வீரர்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் பாகிஸ்தானை எதிர்கொள்கின்றனர். உலக கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானுடன் 6 முறை மோதியுள்ள இந்தியா அனைத்திலும் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த வெற்றி வரலாறும் இந்திய வீரர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்துள்ளது.அதே சமயம், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இந்திய அணியை வீழ்த்தி இருப்பது பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. பந்துவீச்சில் முகமது ஆமிர், பேட்டிங்கில்  ஹபீஸ் சிறப்பான பார்மில் உள்ளனர். இரு அணிகளுமே வெற்றிக்காக வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

பிற்பகலில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நடப்பு தொடரில் ஏற்கனவே 4 ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மிக முக்கியமான இந்த ஆட்டம் பிசுபிசுக்காமல் இருக்க வேண்டும் என்பதே  ரசிகர்களின் பிரார்த்தனையாக உள்ளது. மழை விளையாடினால் விளம்பர வருவாயில் சுமார் ₹150 கோடி வரை இழப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா, லோகேஷ் ராகுல், விஜய் ஷங்கர், எம்.எஸ்.டோனி (விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், யஜ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பூம்ரா, ஹர்திக்  பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஷிகர் தவான் (காயம்).பாகிஸ்தான்: சர்பராஸ் அகமது (கேப்டன்/கீப்பர்), பாபர் ஆஸம், ஹரிஸ் சோகைல், இமத் வாசிம், முகமது ஆமிர், முகமது ஹஸ்னைன், ஷாகீன் அப்ரிடி, வகாப் ரியாஸ், ஆசிப் அலி, பகார் ஸமான், ஹஸன் அலி, இமாம் உல் ஹக், முகமது  ஹபீஸ், ஷதாப் கான், சோயிப் மாலிக்.

Tags : India ,Pakistan , India pledges , continue domination, Pakistan, clash
× RELATED அன்று பருவமழை.... இன்று ஊரடங்கு... நடப்பு...