வத்திராயிருப்பில் பராமரிப்பின்றி கழிப்பறைகள் பாழ்... பேரூராட்சி நிர்வாகம் கவனிக்குமா?

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு பேரூராட்சியில் பராமரிப்பின்றி கழிப்பறைகள் பாழாவதால், பொதுமக்கள் திறந்தவெளிக்கு செல்லும் அவல நிலை உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் கழிப்பறைகளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வாறுகால் மற்றும் கழிவுநீர் ஓடையை தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வத்திராயிருப்புவில் உள்ள உப்புக்காரக்குடித் தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி பெண்களின் பயன்பாட்டிற்காக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கழிப்பறை கட்டப்பட்டது. இக்கழிப்பறையை முறையாக பராமரிக்காததால் கருவேல மரங்கள் வளர்ந்து புதர்மண்டிக் கிடக்கிறது. இதில் பாம்புகள் நடமாடுவதாக கூறப்படுகிறது. கழிப்பறையில் உள்ள குடிநீர் தொட்டி சேதமடைந்துள்ளது. இதனால், பாதி அளவுக்கு மட்டுமே தண்ணீர் தேக்கப்படுகிறது. கழிப்பறையில் உள்ள மின்விளக்குகள் எரிவதில்லை. 5 கோப்பைகளில் 3 கோப்பைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

எனவே, இந்த கழிப்பறையில் உள்ள 5 கோப்பைகளையும் மாற்றிவிட்டு புதிய கோப்பைகளை அமைக்க வேண்டும். முட்புதர்களை அகற்ற வேண்டும். மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். ஆழ்துளை கிணறு, புதிய குடிநீர் தொட்டி அமைத்து மீண்டும் கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேர்வாரன் கோயில் தெரு கழிப்பறை

இதேபோல, நகரில் உள்ள சேர்வாரன் கோயில் தெருவில் 200 வீடுகள் உள்ளன. இப்பகுதி பெண்களின் பயன்பாட்டிற்காக கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இந்த கழிப்பறை பராமரிப்பின்றி உள்ளது. நுழைவுப் பகுதியில் முட்செடிகள் வளர்ந்துள்ளன. பெண்கள் திறந்தவெளியை பயன்படுத்துவதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் முட்செடிகளை அகற்றிவிட்டு, தண்ணீர் வசதி ஏற்படுத்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூர்வாராத வாறுகால்கள்

நகரில் பல்வேறு தெருக்களில் வாறுகால்கள் தூர்வாரப்படாமல் உள்ளன. இதனால், கழிவுநீர் தெருக்கள் வழியாகச் செல்கிறது. மேலும், ஓடைகளில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உருவாகின்றன. இதனால், பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் ஓடையையும், வில்வாராயன் குளத்தையும் தூர்வார வேண்டும். எனவே, வத்திராயிருப்பு பேரூராட்சியில் பராமரிப்பின்றி பாழாகும் கழிப்பறைகளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Toilets, vattirayiruppu
× RELATED வீட்டடிமனை அனுமதி தருவதில் முறைகேடு