×

வாஷ் அவுட் ஆன ஆளும் கூட்டணி குமரி முதல் சென்னை வரை வீசிய மக்கள் கோப அலை

சென்னை: நாடு முழுவதும் நடத்தப்பட்ட நாடாளுமன்ற தேர்தலில் பாஜ கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. ஆனாலும், தமிழகத்தில் பாஜவுக்கு எதிரான அலையே வீசுகிறது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. திமுக தலைமையிலான கூட்டணியில் திமுக 20 தொகுதிகள் போக மற்ற தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டன. அதேபோன்று அதிமுகவும் 20 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த தேர்தலோடு 22 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடத்தப்பட்டது. இடைத்தேர்தலில் அதிமுக 10 தொகுதிகள் வரை வெற்றி பெறாவிட்டால் ஆட்சியை இழக்கும் நிலை என்பதால் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் போட்டியிட்டது. இதனால் தமிழகத்தில் அதிமுக, திமுக கூட்டணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது.  பாஜவை பொறுத்தவரை தமிழகத்தில் பெரிய அளவில் இன்னும் கால்பதிக்கவில்லை. இந்த தேர்தலை பயன்படுத்தி அதிமுக மூலம் தடம் பதிக்க திட்டமிட்டது. அதிமுக கூட்டணியில் 10  முதல் 15 சீட்களை பெற்று தமிழகத்தில் தேர்தலை சந்திக்க முடிவு செய்தனர்.  இருந்தாலும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் வேண்டும் என்று பாஜ கேட்டு வாங்கியது. அதிலும் பாஜ கட்சியின் முக்கிய தலைவர்களை நிறுத்தியது. எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்று கணக்கு போட்டது. ஆனால் அது மனக்கணக்காகவே போய்விட்டது. தமிழகத்தில் பாஜ கொண்டு வந்த ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் போன்றவைகளில் தமிழகத்தில் நடுத்தர மக்களும், தொழில் நிறுவனங்கள் வைத்திருப்பவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

 சிறு தொழில் மூலம் முதலாளிகளாக இருந்தவர்களில் பலர் இப்போது வேலைக்கு செல்லும் தொழிலாளிகளாக மாறிவிட்டனர். இதுபோன்ற மோடிக்கு எதிரான கோப அலை தமிழகம் முழுவதும் வீசி வந்தது. இதனுடன் சேர்த்து கடும் வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் நடந்து வரும் ஆளும் அதிமுக அரசின் நடவடிக்கை. அதற்கு காரணம் எந்த துறையை எடுத்தாலும், ஊழல்... ஊழல்... என்று சொல்லும் அளவுக்கு அமைச்சர்களின் நடவடிக்கை உள்ளதாக பொதுமக்களின் குற்றச்சாட்டு. . இப்படி மத்தியில் ஆளும் பாஜ ஆட்சி மீதும், தமிழகத்தில் ஆளும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி மீதும் தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இதை தடுக்கும் வகையில்தான் வாக்காளர்களுக்கு ஆளும் தரப்பில் பணம் வாரி இறைக்கப்பட்டதாக எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்தன. மேலும், அதிமுக கூட்டணியில் இணைந்த பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சியினர் கூட்டணி அமைப்பதற்கு முந்தைய நாள் வரை முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், அதிமுக ஆட்சியையும் கடுமையாக விமர்சித்தவர்கள். அவர்களை கூட்டணிக்கு இழுப்பதற்கு பெருந்தொகை வழங்கப்பட்டதாகவும் எதிர்கட்சியினர் விமர்சித்து பிரசாரம் செய்தனர். நேற்று வரை மிகவும் அசிங்கமாக திட்டியவர்கள் இன்று அவர்களுடன் கூட்டணிக்காக சமரசமாகிவிட்டனரே என்ற தகவல் அடித்தட்டு மக்கள் வரை சென்றடைந்துவிட்டது. இதுபோன்ற தமிழக மக்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட பாஜ, அதிமுக அரசு மீதான கோப அலை குமரி முதல் சென்னை வரை ஒரே மாதிரியாக வீசியதால் தான் இந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி தமிழகத்தில் வாஷ் அவுட் ஆகும் நிலைக்கு சென்று விட்டதாகவே பரபரப்பாக பேசப்படுகிறது. ஊழல்... ஊழல்... என்று சொல்லும் அளவுக்கு அமைச்சர்களின் நடவடிக்கை உள்ளதாக பொதுமக்களின் குற்றச்சாட்டு



Tags : coalition ,Kumari ,Chennai , Wash out ,ruling coalition, Chennai,angry waves
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...