×

சட்ட விரோதமாக மீன்பிடிக்க வளவனாற்றில் தண்ணீர் இறைத்து விரயம் செய்வதை தடுக்க வேண்டும்: முத்துப்பேட்டை ஒன்றிய கடைமடை பகுதி மக்கள் கோரிக்கை.

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியத்தில் கடைசி பகுதியான கரைங்காடு, இடும்பாவனம் கற்பகநாதர்குளம் தொண்டியக்காடு பகுதிகளை கடந்து கடலில் கலக்கும் வளவனாறு இப்பகுதி மக்களுக்கு மட்டுமல்லாது இந்த ஆறு கடந்து வரும் பகுதியின் அனைத்து மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மிகவும் பயனுள்ள ஆறாகும். மேலும் நிலத்தடிநீரை சேமிக்கவும் உதவுகிறது.அதேபோன்று கடல்நீர் உட்புகாமலும் தடுக்கிறது. அதேபோல் மறுபுறம் இருக்கும் நாகை மாவட்டம் வாய்மேடு சுற்று பகுதி மக்களுக்கும் இந்த ஆறு மிகவும் பயனுள்ள ஆறாகவே உள்ளது. இந்த வளவனாற்றில் தற்பொழுது கோடை வெயில் தாக்கத்தால் ஆற்றின் நெடுவெங்கும் தண்ணீர் வற்றி வருகிறது. இதில் கற்பகநாதர்குளம் பம்பு செட் அருகில் உள்ள வாய்மேடு இணைப்பு பாலம் முதல் முனாங்காடு தடுப்பணை வரையில் வளவனாற்றில் தண்ணீர் அதிகளவில் தேங்கி கிடந்தது. இந்தநிலையில் தேங்கிய தண்ணீரில் பல லட்சம் மதிப்புள்ள விலைஉயர்ந்த மீன்களும் இருந்தன. இதனை ஒப்பந்தம் எடுத்ததாக கூறி சட்ட விரோதமாக சில நாட்களாக மீன்களை பிடித்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி சேற்றில் மறைந்து இருக்கும் விலைஉயர்ந்த விரால் மீன்களை பிடிக்க தேங்கிய தண்ணீரை மோட்டார் வைத்து இறைத்து மாற்று பாதையில் செலுத்தி தண்ணீரை வீண்விரயம் செய்து வருகின்றனர். அதனால் மக்களுக்கு சொற்பமாக இருந்த தண்ணீர் இன்று மக்களுக்கு பயன்படாமல் வீணாகி வருவதுடன், கால்நடைகளுக்கும் பயன் இல்லாமல் போய்வருகிறது. தற்பொழுது பல பகுதி தண்ணீர் இறைக்கப்பட்டு ஆறு வற்றி வறண்டுபோய் காணப்படுகிறது.மேலும் இதன் மூலம் நிலத்தடிநீர் மட்டமும் இப்பகுதியில் குறைந்து வருவதுடன் கடல்நீரும் உட்புக வாய்ப்புள்ளது. தண்ணீர் இறைப்பது மூலம் மீன் பிடிப்பவர்களுக்கு தேவையில்லை என்று கருதப்படும் ஆயிரக்கணக்கான டேங் கிளினர் மீன்கள் செத்து மிதக்கிறது. மேலும் சுற்றுபகுதியில் அந்த மீன்களை பறவைகள் எடுத்து செல்வதால் ஆங்காங்கே கிடக்கிறது. இதனால் நாற்றம் வீசுவதுடன் இதன் மூலம் தொற்றுநோய் பரவும் வாய்ப்புகள் உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து சென்றும் தண்ணீரை வீணாக்குவதை தடுக்கவில்லை.இது தவிர கடல் நீருடன் கலந்து கடக்கும் மிஞ்சிய தண்ணீரையும் சிலர் விட்டு வைக்கவில்லை. இதே ஆற்றில் முனாங்காடு அருகே கட்டப்படும் தடுப்பணை பணிக்கு இந்த தண்ணீரை விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக டேங்கர் லாரிகளில் எடுத்து செல்வதுடன் அந்த தண்ணீரை கொண்டு தடுப்பணையின் கட்டுமான பணிக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் விரைவில் கட்டுமானத்தில் உப்புத்தன்மை கொண்டு தடுப்பணை இடிந்து விழுந்து சேதமாகவும் வாய்ப்புகள் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைகின்றனர்.ஆகவே இப்பகுதி மக்கள் நலன் கருதியும் இப்பகுதியின் நிலத்தடிநீரை பாதுக்காக்கும் வகையிலும் மாவட்ட கலெக்டர் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுத்து வளவனாற்றில் தண்ணீரை இறைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். அதே நேரத்தில் செத்துக்கிடக்கும் மீன்களை அகற்றி சுத்தம் செய்து இப்பகுதி மக்களை தொற்று நோய்களிலிருந்து காப்பாற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடல் நீருடன் கலந்து கடக்கும் மிஞ்சிய தண்ணீரையும் சிலர் விட்டு வைக்கவில்லை. இதே ஆற்றில் முனாங்காடு அருகே கட்டப்படும் தடுப்பணை பணிக்கு இந்த தண்ணீரை விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக டேங்கர் லாரிகளில் எடுத்து செல்வதுடன் அந்த தண்ணீரை கொண்டு தடுப்பணையின் கட்டுமான பணிக்கு பயன்படுத்தி வருகின்றனர்.



Tags : water dispersing ,field ,Muthupetu Union , prevent ,disposal,Muthupetu Union.
× RELATED அசாமில் 7 ரயில்கள் ரத்தால்...