×

ஜூன் 12-ல் மேட்டூர் அணையை திறக்காவிட்டால் விவசாயிகளிடம் அதிமுக அரசு மன்னிப்பு கோர வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை:  குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையை திறந்துவிட வேண்டும் என அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு உரிய நேரத்தில் நீரைத் திறக்காமல் விவசாயிகளை அதிமுக அரசு வஞ்சித்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தைக் கூட்டுவதற்கோ உரிய நீரைப் பெறுவதற்கோ அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. விவசாயிகள், பொதுமக்களை வஞ்சிக்கும் அதிமுக அரசின் செயல்பாடு கவலை அளிக்கிறது.

காவிரி நீரை பெறுவதில் கோட்டை விட்டு மக்கள் வரிப்பணத்தை கொள்ளை அடிப்பதில் மட்டுமே அதிமுக அரசு குறியாக உள்ளது. ஜூன் 12-ல் மேட்டூர் அணையை திறக்க முடியாவிட்டால் விவசாயிகளிடம் அதிமுக அரசு மன்னிப்பு கோர வேண்டும். விவசாயிகளின் இன்னல்களை போக்கி காவிரி டெல்டா மண்டலத்தை காப்பாற்றிட வேண்டும். நீர் திறப்பதற்காக காவிரி நீர் ஒழுங்காற்று குழு, மேலாண்மை அணைய கூட்டத்தை கூட்ட வேண்டும். காவிரி குழு கூட்டத்தை கூட்டி முதல்வர் பழனிச்சாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களை பாலைவனம் ஆக்கி போராட்ட சூழலை உண்டாக்கி அமைதியைக் குலைக்கின்ற செயல் கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : AIADMK ,Mettur Dam ,MK Stalin , MK Stalin, Mettur Dam, AIADMK Government
× RELATED மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.15 அடியாக குறைவு..!!