பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து ஆதிக்கம்: 4-0 என தொடரை வென்றது

லீட்ஸ்: பாகிஸ்தான் அணியுடனான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், 54 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இங்கிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஹெடிங்லி மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த இப்போட்டியில் டாசில் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 351 ரன் குவித்தது. ஜேம்ஸ் வின்ஸ் 33,  ஜானி பேர்ஸ்டோ 32, கேப்டன் இயான் மோர்கன் 76, ஜோ  ரூட் 84, பட்லர் 34, பென் ஸ்டோக்ஸ் 21, டாம் கரன் 29 ரன் விளாசினர். பாகிஸ்தான் பந்துவீச்சில் ஷாகீன் ஷா அப்ரிடி 4, இமத் வாசிம் 3, ஹசன் அலி, முகமது ஹஸ்னைன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 352 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 46.5 ஓவரில் 297 ரன் குவித்து ஆல் அவுட்டானது. கேப்டன் சர்பராஸ் அகமது 97 ரன் (80 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), பாபர் ஆஸம் 80 ரன் (83 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினர். முகமது ஹஸ்னைன் 28, இமத் வாசிம் 25, ஆசிப் அலி 22 ரன் எடுத்தனர். ஷாகீன் ஷா அப்ரிடி 19 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ் 10 ஓவரில் 2 மெய்டன் உட்பட 54 ரன் விட்டுக் கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார்.

அடில் ரஷித் 2, டேவிட் வில்லி 1 விக்கெட் வீழ்த்தினர். 54 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இங்கிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் தொடரை வசப்படுத்தியது. அந்த அணியின் கிறிஸ் வோக்ஸ் ஆட்ட நாயகன் விருதும், ஜேசன் ராய் தொடர் நாயகன் விருதும் பெற்றனர். சொந்த மண்ணில் நடைபெற உள்ள உலக கோப்பை தொடருக்கு முன்பாக பெற்றுள்ள இந்த அபார வெற்றி, நம்பர் 1 அணியான இங்கிலாந்துக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

× RELATED இங்கிலாந்தில் நடைபெறும் இந்தியா-...