×

ஊட்டி தாவரவியல் பூங்காவில் புதிய கார்னேசன் மலர் அலங்காரம்

* வாடிய பூக்கள் அகற்றம்

ஊட்டி : ஊட்டி மலர் கண்காட்சி மாடத்தில் வெப்பம் தாங்காமல் கருகிய மலர்கள் மாற்றப்பட்டுள்ளன. ரோஜா மலர் அலங்காரங்கள் அகற்றப்பட்டு தற்போது கார்னேசன் மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.   ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடக்கிறது. இதற்காக, 5 லட்சம் மலர் செடிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே நடவு செய்யப்பட்டன. இந்த மலர் செடிகளில் தற்போது மலர்கள் பூத்துகுலுங்குகிறது.

அதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். அதேபோல், மாடங்களில் வைப்பதற்காக பல்வேறு மலர் செடிகள் ெதாட்டிகளில் நடவு செய்யப்படும். இம்முறை 35 ஆயிரம் மலர் தொட்டிகள் தயார் செய்யப்பட்டது. அந்த தொட்டிகளில் உள்நாட்டு மலர் செடிகள் மட்டுமின்றி, ஹாலாந்து நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட தூ லிப்ஸ், ஆர்கிட் போன்ற மலர்களும் வைக்கப்பட்டது.

 இந்நிலையில், நூற்றாண்டு பழமை வாய்ந்த மாடங்களை தோட்டக்கலைத்துறை இம்முறை ரூ.36 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டது. ஏற்கனவே இருந்த பழைய மாடத்தை அகற்றிவிட்டு புதிதாக மாடம் அமைக்கப்பட்டது.  மேலும், மாடத்தின் மேற்கூரை பாலி கார்பனேட் எனப்படும் கண்ணாடி போன்ற பிளாஸ்டிக் கூரை போடப்பட்டது. பார்ப்பதற்கு மிகவும் அழகாக மாடம் தற்போது காட்சியளித்தாலும், பிளாஸ்டிக் கூரை வெப்பத்தை ஈர்த்து விடுகிறது. இந்த வெப்பம் மலர்களின் மீது விழுவதால், மலர்கள் கருகி விட்டன.

பொதுவாக மாடங்களில் வைக்கப்படும் தொட்டிகள் 15 நாட்களுக்கு மேல் தாக்குபிடிக்கும். ஆனால், இம்முறை மாடங்களில் வைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரம் ஒரே நாளில் பாதித்துள்ளது.  அதேபோல் நுழைவு வாயிலில் ரோஜா மலர்களை கொண்டு 123 மலர் கண்காட்சி என அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இந்த அலங்காரத்தில் இருந்த மலர்கள் அனைத்தும் வெப்பம் தாங்காமல் காய்ந்து போயின.

இந்நிலையில், அந்த மலர் அலங்காரங்களை மாற்றும் பணிகளும், சூரிய ஒளி மலர்களின் மீது விழாமல் இருக்க கூரைகளின் மீது நைலன் வலைகளும் போடப்பட்டுள்ளது. வாடிய ரோஜா மலர்கள் அனைத்தும் அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக தற்போது கார்னேசன் மலர்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளன.  எனினும், அனைத்து மலர் செடிகளும் வெப்பம் தாங்காமல் காய்ந்து விடும் நிலையில், பகல் நேரங்களிலேயே தண்ணீர் பாய்ச்சும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Tags : Ooty Botanical Zoo , Ooty ,Botanical Park,flower decoration,New carnation flower
× RELATED ஊட்டி தாவரவியல் பூங்காவில் டிராகன் மரங்கள் இட மாற்றம்