குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா கோலாகலம்...... பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த அம்மன் சிரசு: ஆயிரக்கணக்கானோர் தரிசனம்

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் பிரசித்திபெற்ற விழாக்களில் ஒன்று குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா. ஆண்டுதோறும் வைகாசி மாதம் 1ம் தேதி இந்த விழா நடைபெறுகிறது. அதன்படி இந்தாண்டிற்கான சிரசு திருவிழா இன்று கோலாகலமாக நடந்தது. இதையொட்டி கடந்த மாதம் 10ம் தேதி பால் கம்பம் நடப்பட்டு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து காலை, மாலை சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்று வருகிறது. கடந்த 11ம் தேதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவை முன்னிட்டு தினமும் திரளான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து பொங்கல் வைத்தும், கூழ் வார்த்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வந்தனர். தொடர்ந்து, நேற்று தேரோட்டம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் தேரில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

விழாவின் முக்கிய நிகழ்வான கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் இன்று நடந்தது. காலை 6 மணியளவில் முத்தியாலம்மன் கோயிலில் இருந்து அம்மன் சிரசு ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் வெள்ளத்தில் கெங்கையம்மன் கோயிலுக்கு வந்தது. அப்போது வழிநெடுகிலும் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தேங்காய் உடைத்து அம்மனை வணங்கினர். பின்னர் அம்மனுக்கு கண் திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. சிரசுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிவித்து தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சுமார் 3 டன் தேங்காய்கள் பக்தர்கள் உடைத்தனர். ஊர்வலத்தின்போது மயிலாட்டம், புலியாட்டம், சிலம்பாட்டம் உட்பட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை 500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நடத்தினர். மேலும் பக்தர்கள் வேண்டுதலின் பேரில் தேங்காய்களை உடைத்தும், ஆடு, கோழி பலியிட்டும், பலர் அலகுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடந்தன. பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

மலர் மாலை, எலுமிச்சை மாலை, ரூபாய் நோட்டு மாலை ஆகியவற்றை பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து அம்மனுக்கு அணிவித்து வழிபட்டனர். வழி எங்கும் பக்தர்களுக்கு நீர், மோர், கூழ் இலவசமாக வழங்கினர். தொடர்ந்து இன்று இரவு அம்மன் உடலில் இருந்து சிரசு பிரிக்கப்பட்டு, கவுண்டன்ய ஆற்றங்கரையில் அலங்காரம் கலைக்கப்பட்டு மீண்டும் கோயிலுக்கு கொண்டு வரப்பட உள்ளது. விழாவில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். குடியாத்தம் நகர் முழுவதும் பக்தர்களாகவே இருந்தனர். குடியாத்தம் ஏடிஎஸ்பி ஆசைத்தம்பி தலைமையில் 3 டிஎஸ்பிகள், 10 இன்ஸ்பெக்டர், 30 எஸ்ஐக்கள் உட்பட 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுதவிர தனிப்பிரிவு போலீசார், உளவுத்துறை, வெடிகுண்டு நிபுணர்க்ள பல்வேறு பாதுகாப்பு கருவிகளுடன் கோயில், ஊர்வலம் கட்டிடம் உள்ளிட்ட பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


× RELATED தன்வந்திரியை வழிபட்டால் மார்க்கண்டேய யோகம் கிட்டும்!