அரக்கோணம் அருகே இன்று குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல்

அரக்கோணம்: அரக்கோணம் அருகே இன்று சீரான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அரக்கோணம் அடுத்த மின்னல் ஊராட்சி இந்திரா நகர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 6 மாதமாக சீரான குடிநீர் வழங்கவில்லையாம். இதனால் அவதியடைந்த அப்பகுதி மக்கள், மின்னல் ஊராட்சி நிர்வாகம் மற்றும் காவேரிப்பாக்கம் பிடிஓ அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்றுகாலை 7 மணியளவில் காலிகுடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த மின்னல் ஊராட்சி செயலாளர் சுந்தரவேல், தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரபேல் லூயிஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எங்கள் பகுதிக்கு பைப் மூலம் ஒரு சொட்டு தண்ணீர் கூட வருவதில்லை. குடிநீருக்காக நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம். எனவே மெயின் லைனில் இருந்து தனியாக பிரித்து எங்கள் பகுதிக்கு தண்ணீர் வழங்கவேண்டும் என கூறினர். இதையடுத்து சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் அனைவரும் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED ஆத்தூர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்