×

ஏப்.29-ம் தேதி மணிக்கு 90 முதல் 100 கி.மீ. வரை காற்று வீசக்கூடும்: புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வருவாய் ஆணையர் பேட்டி

சென்னை: சென்னைக்கு தென்கிழக்கே 1,440 கி.மீ.தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார்.  இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில்  நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது மேலும் வலுப்பெற்று  புயலாக மாறி வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதியில் வரும் 30ம் தேதி நெருங்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் வங்கக்கடல் பகுதியில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில்  நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர், புதுச்சேரி துறைமுகங்களிலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. பாம்பன் துறைமுகத்தில் 1ம்  எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஆழ் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் வரும் 28ம் தேதிக்குள் கரை திரும்ப மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் பேட்டி:

இந்நிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், சென்னைக்கு தென்கிழக்கே 1,440 கி.மீ.தொலைவில் புயல்  மையம் கொண்டுள்ளது என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறும் என்றும் தெரிவித்தார். 30-ம் தேதி மாலை வடதமிழகம், தெற்கு ஆந்திரத்துக்கு இடையே புயல்  மையம் கொண்டு இருக்கும் என்றார். மேலும், ஏப்ரல் 30 மற்றும் மே-1 ஆகிய தேதிகளில் மிதமான மழையும் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் ஏப்ரல் 29-ம் தேதியில் மணிக்கு 90 முதல் 100 கி.மீ. வரை காற்று  வீசக்கூடும் என்றார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. புயல் பாதிக்கப்படும் என கணக்கிடப்பட்டுள்ள 4,399 பகுதிகளில் மீட்புக்குழு தயார் நிலையில் வைக்கப்படும், புயலால்  பாதிக்கப்படக் கூடிய இடங்களில் மீட்புப் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார். மீட்புப் பணியில் ஈடுபட 30,000 களப்பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர், களப்பணியாளர்களல் 30,000 பேரில்  8,000 பேர் பெண்கள் உள்ளனர். புயல் நேரத்தில் கால்நடைகளை மீட்பதற்காக மட்டுமே 8000 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நடுக்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் 28-ம் தேதிக்குள் கரை திரும்ப  அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : revenue commissioner , Wind can blow: storm warning, revenue commissioner
× RELATED ஷர்மிளா தற்கொலை விவகாரம்:...