பதனீர் இறக்க அனுமதி மறுப்பு பனை தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு

பண்ருட்டி: பண்ருட்டி  அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த 20 ஆண்டுக்கு முன்பு ஏரி, குளங்கள்,  வாய்க்கால்கள் பகுதியில் பனை மரங்கள் அதிகளவு இருந்தன. இவை நீர்நிலைகளின்  கரைகளை பாதுகாத்து உறுதி அளித்தன. காலம் மாற மாற பனை மரங்கள் அழியும்  சூழ்நிலை ஏற்பட்டது. பனை மரங்களால் கிடைத்து வந்த பொருட்களைகொண்டு பனைஏறும்  தொழிலாளர்கள் வாழ்ந்து வந்தனர். இதில் கிடைக்கும் பதனீர் வெயில்  காலத்தில் சூட்டை தணித்து அல்சர், வாய்ப்புண், நீர்கடுப்பு, மலச்சிக்கல்,  மூட்டு வலி, பெண்கள் கர்ப்பகாலத்தில் ஏற்படும் நீர் பிரச்னைகள், நீரிழிவு  நோய் ஆகியவற்றிற்கு இயற்கை மருந்தாக இருந்தது.இதனை அரசு சரியாக  ஊக்கப்படுத்தி இருந்தால், தமிழகம் முழுவதும் கோடை வெயிலின்  தாக்கத்திலிருந்தும், நோய்களிலிருந்தும் காப்பாற்றி இருக்கலாம். கடலூர் மாவட்டத்தில்  உண்ணாமலைரெட்டிசாவடி, திருச்சோபுரம், கீழ்பட்டாம்பாக்கம், விழமங்கலம்,  கொக்குப்பாளையம் உள்ளிட்ட ஏராளமான இடங்களில் பனைமர தோப்புகள் உள்ளன. இந்த  தொழிலை மட்டுமே நம்பி சுமார் 2000 குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர்.  அந்தந்த நகர பகுதியில் கூட்டுறவு சங்கங்கள் துவங்கி செயல்பட்டு வந்தன.  தற்போது தமிழ்நாடு பனைபொருள் வாரியம் சார்பில் செயற்பதிவாளர் அனைத்து உதவி  இயக்குனர்களுக்கு 01.04.2009 முதல் 31.03.2020 வரை பனை மரத்திலிருந்து  பதனீர் இறக்கி விற்பனை செய்ய ஆணை பிறப்பித்து இருந்தார். ஆனால்  இந்த உத்தரவு காவல்துறையில் உரிய முறையில் கடிதம் வழங்கியும் இதுநாள்வரை  பதனீர் இறக்க முடியவில்லை. இதனால் இந்த தொழிலை நம்பி மட்டுமே வாழும்  தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து உணவிற்கே வருமானம் இல்லாமல் அவதிப்பட்டு  வருகின்றனர்.

இது குறித்து விழமங்கலம் பனைவெல்லம் உற்பத்தியாளர் சங்க தலைவர்  சேகர் கூறியதாவது: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும்  கலால்துறைக்கு விண்ணப்பித்தும் பதனீர் இறக்குவதற்கு அனுமதி தரவில்லை. கடந்த  சில ஆண்டுகளாக தொடர்ந்து அனுமதி அளித்து வந்து, தற்போது மட்டும் ஏன்  அனுமதி தரவில்லை என கேட்டபோது காரணம் கூறவில்லை. பண்ருட்டி அருகே  கொக்குபாளையத்தில் 1963ம் ஆண்டிலிருந்து அரசு அனுமதி பெற்று கடந்த ஆண்டுவரை  பனைமரத்தில் பதனீர் இறக்கி விற்பனை செய்து வந்தோம். இது மட்டுமின்றி  பனைவெல்லம் தயாரித்து விற்பனை செய்து வாழ்ந்து வந்தோம். ஆனால் முற்றிலுமாக  இந்த தொழிலை இந்த வருடம் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். இது  குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்து உரிய உத்தரவு பெற்று பதனீர்  இறக்கி மற்றும் பனைவெல்லம் தயார் செய்ய உள்ளோம் என தெரிவித்தார்.எனவே  மாவட்ட நிர்வாகம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து பனை தொழிலை மட்டுமே  நம்பி உள்ள தொழிலாளர்களை காப்பாற்றவேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED திருவண்ணாமலையில் அக்னி முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையவில்லை