×

கொளுத்தும் வெயிலில் தீப்பிடிக்க வாய்ப்பு வாகனங்களில் பெட்ரோல் நிரப்புவதில் முன்னெச்சரிக்கை அவசியம்: டயர்களை பராமரிக்கவும் அதிகாரிகள் அறிவுரை

வேலூர்: கொளுத்தும் வெயிலில் வாகனங்கள் தீப்பிடிக்க வாய்ப்புள்ளதால், பெட்ரோல் விற்பனையகங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரிக்கிறது. அதிகப்படியான வெப்பத்தால் கோடைகாலத்தில் வாகனங்கள் தீப்பிடித்து எரிவது, வாகனங்கள் ஓடிக்கொண்டிருக்கும்போதே டயர்கள் வெடித்து விபத்து ஏற்படுவது உள்ளிட்ட சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே, பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் விதிமுறைகளை கையாளுவதில் அலட்சியம் காட்ட வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கோடை காலம் தொடங்கி விட்டதால், வாகனங்களில் உள்ள பெட்ரோல், டீசல் டேங்குகளில் எரிபொருள் மூலக்கூறுகள் விரிவடைந்து வெடித்து தீப்பிடிக்க வாய்ப்புள்ளது. எனவே, பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பும்போது வாகனங்களின் என்ஜினை நிறுத்திவிட வேண்டும். டேங்க் முழுவதுமாக நிரப்பக்கூடாது. பெட்ரோல் விற்பனை நிலையங்களில் தீயணைப்பான் உள்ளிட்ட தீத்தடுப்பு சாதனங்களை வைத்திருக்க வேண்டும்.

பெட்ரோல் விற்பனையகங்களில் செல்போன் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சாதாரண நேரத்திலும் வாகன ஓட்டிகள் செல்போன்களை டேங்க் கவரில் வைக்க கூடாது. இதனால், செல்போன் சூடாகி பேட்டரி மற்றும் காற்றலையால் வரும் கதிர்வீச்சு காரணமாக தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. தீ விபத்துகளை தவிர்ப்பதில் அனைவரது ஒத்துழைப்பும் அவசியம்’ என்றனர். இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், ‘கோடை காலத்தில் சாலைகள் அதிகப்படியாக வெப்பமடைகிறது. இதனால், டயர்கள் தேய்ந்து வெடிக்கின்றன. இதனால் பைக், கார் உள்ளிட்ட வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. எனவே, வாகனங்களின் டயர்களில் காற்றை முழுமையாக நிரப்பாமலும், குறைவாக வைத்திருக்காமலும், சீரான நிலையில் வைத்திருக்க வேண்டும். தேய்ந்து போன டயர்களை மாற்றிக் கொள்ள வேண்டும். வாகனங்களை முறையாக பராமரித்தால் கோடை காலத்தில் ஏற்படும் விபத்துகளை பெருமளவில் தவிர்க்க முடியும்’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Prevailing of petrol in vehicles
× RELATED செங்கல்பட்டில் ரயில் மறியல்: விவசாயிகள் கைது