×

கட்டண வசூலில் விமானநிலைய மெட்ரோ ரயில் நிலையம் முதலிடம்

* ஒரு நாளைக்கு 2.63 லட்சம் வருவாய்
* 2ம் இடத்தில் திருமங்கலம்

சென்னை: நாள் தோறும் அதிக கட்டணம் வசூல் செய்வதில்  சென்னை விமானநிலைய மெட்ரோ ரயில் நிலையம் முதல் இடத்தில் உள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு 2.63 லட்சம் வருவாய் கிடைக்கிறது.  திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையம் 2வது இடத்தில் உள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டும், போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் பொருட்டும் 45 கி.மீட்டர் தூரத்திற்கான முதல் வழித்தட திட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி, இந்த திட்டம் கடந்த மாதம் 10ம் தேதியுடன் நிறைவு பெற்றது. முதல் வழித்தட திட்டத்தில் வண்ணாரப்பேட்டை முதல் விமானநிலையம் வரையிலும், பரங்கிமலையில் இருந்து சென்ட்ரல் வரையிலும் மொத்தம் 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளது. இதேபோல், தினந்தோறும் 80 முதல் 90 ஆயிரம் பயணிகள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், மெட்ரோ ரயிலில் பயணிகளின் வருகையை அதிகரிக்க ஒரு நாள் டூரிஸ்ட் கார்டு திட்டம், டிராவல் கார்டு திட்டம் உள்ளிட்ட திட்டங்களை மெட்ரோ ரயில் நிர்வாகம் கையாண்டு வருகிறது. இதேபோல், காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையில் செயல்பட்டு வரும் சேவையை விழா நாட்களில் நீட்டிப்பு செய்தும் பயணிகளின் வருகையை அதிகரிக்க வழிவகை செய்கிறது. வண்ணாரப்பேட்டை வரையில் திட்டம் முழுமையாக செயல்படுத்துவதற்கு முன்பாக குறைந்த வருவாய் மட்டுமே நிர்வாகத்திற்கு கிடைத்து வந்தது. அதிகரிக்கப்பட்ட கட்டணத்தினால் ஏழை, எளிய மக்கள் இன்றளவும் இந்த சேவையை புறக்கணித்து வருகின்றனர். குறிப்பாக, அலுவலகங்களுக்கு செல்பவர்கள், விரைவு சேவையை விரும்பவர்கள் மட்டுமே மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், முதல் வழித்தட திட்டம் முழுமை பெற்று செயல்பட்டு வரும் நிலையில் அதிக வசூலாகும் முதல் 4 மெட்ரோ ரயில் நிலையங்களில் விமானநிலைய மெட்ரோ ரயில் நிலையம் முதல் இடத்தில் உள்ளது. குறிப்பாக, இங்கு நாள் தோறும் 2 லட்சத்து 63 ஆயிரம் வசூலாகி வருகிறது. 2வது இடத்தில் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது. இங்கு நாள் தோறும் 2 லட்சத்து 50 ஆயிரம் வசூலாகிறது. 3வது இடத்தில் வடபழனி மெட்ரோ ரயில் நிலையம் உள்ளது. இங்கு 2 லட்சத்து 25 ஆயிரம் வசூலாகிறது. 4வது இடத்தில் சென்ட்ரல் உள்ளது. இங்கு 1 லட்சத்து 65 ஆயிரம் வசூலாகிறது.  இதேபோல், குறைந்த வருவாய் வரும் மெட்ரோ ரயில் நிலையங்களில் பச்சையப்பா 20 ஆயிரம், கீழ்ப்பாக்கம் 20-25 ஆயிரம் என உள்ளது. வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தை செயல்பாட்டிற்கு வருவதற்கு முன்பாக நாள் ஒன்றுக்கு 15 முதல் 20 லட்சமாக இருந்த வருவாய் தற்போது 25 லட்சமாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் வருவாயை அதிகரிக்கவும், பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்தவும் சிறப்பு திட்டங்களை அறிவிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Airport Metro Railway Station , Airport Metro Railway Station
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...