×

184 தொகுதிகளுக்கு பாஜ வேட்பாளர் பட்டியல் வாரணாசியில் மீண்டும் மோடி போட்டி

* அமேதியில் ராகுலுடன் மோதுகிறார் ஸ்மிருதி இரானி; லக்னோவில் ராஜ்நாத்; காந்திநகரில் அமித்ஷா; நாக்பூரில் நிதின் கட்கரி

புதுடெல்லி: மக்களவை தேர்தலுக்கான முதல் வாக்காளர் பட்டியலை பாஜ நேற்று வெளியிட்டது. இதில் 184 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுகிறார். பாஜ மூத்த தலைவர் அத்வானி குஜராத்தின் காந்திநகர் தொகுதியில், இந்த முறை பாஜ தலைவர் அமித்ஷா போட்டியிடுகிறார். அமேதி தொகுதியில் ராகுலை எதிர்த்து, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீண்டும் களம் இறக்கப்பட்டுள்ளார். மக்களவை தேர்தல் மற்றும் ஆந்திரா உட்பட 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் கடந்த 10ம் தேதி அறிவித்தது. நாட்டில் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கும், ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை 7 கட்டங்ளாக இந்த தேர்தல் நடத்தப்படுகிறது. மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் வெளியிடப்படவுள்ளன. காங்கிரஸ் கட்சி தேர்தல் தேதி அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பே முதல் வாக்காளர் பட்டியலை வெளியிடத் தொடங்கியது. இதையடுத்து பல தேசிய மற்றும் மாநில கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிடத் தொடங்கின. மத்தியில் ஆளும் கட்சியான பாஜ வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் காலதாமதம் செய்து வந்தது.

வேட்பாளர் தேர்வு குறித்து பாஜ மத்திய தேர்தல் குழு பல கூட்டங்களை நடத்தி ஆலோசனை நடத்தியது.  இந்த குழுவில் பிரதமர் மோடி, கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி உட்பட பலர் இடம் பெற்றிருந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை வேட்பாளர் தேர்வு தொடர்பாக சுமார் 7 மணி நேரம் நீண்ட ஆலோசனை நடந்தது. மறுநாள் நடந்த கூட்டத்திலும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. ஆனால் சட்டீஸ்கர் சட்டப்பேரவை தேர்தலில் பாஜ படுதோல்வி அடைந்ததால், அங்குள்ள 10 எம்.பி.க்களையும் மாற்றிவிட்டு புது முகங்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில்  பாஜ மத்தியக் குழுவின் 4வது கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று கூடியது. இதில் நாடு முழுவதும் பா.ஜ சார்பில் போட்டியிடவுள்ள 184 வேட்பாளர்களின் பட்டியல் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று இரவு இந்த பட்டியலில் உள்ள பெயர்களை மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா அறிவித்தார்.

உ.பி.யில் போட்டியிடும் 28 வேட்பாளர்கள், மகாராஷ்டிரா-16, அசாம்-8, சட்டீஸ்கர்-8, ஜம்மு காஷ்மீர்-5, கர்நாடகா-21,  கேரளா-13, ஒடிசா-10, ராஜஸ்தான்-16, தமிழகம்-5, தெலங்கானா-10, உத்தரகாண்ட்-5, மேற்கு வங்கம்-28, ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா தலா 2, குஜராத், சிக்கிம், மிசோரம், லட்சத்தீவு, தத்ரா மற்றும் நாகர் ஹவேலி ஆகிய பகுதிகளில் போட்டியிடும் தலா ஒரு வேட்பாளர் என  மொத்தம் 184 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. உத்தரப் பிரதேசம் வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுலை எதிர்த்து மீண்டும் போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தனது மகாராஷ்டிரா நாக்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உ.பி.யின் லக்னோவில் போட்டியிடுகிறார். மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் உ.பி.யின் காசியாபாத் தொகுதியில் போட்டியிடுகிறார். நடிகை ஹேமா மாலினி உபி.யின் மதுரா தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். பீகார் மாநிலத்தில் போட்டியிடும் 17 வேட்பாளர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டாலும், அவர்களது பட்டியல் இன்னொரு நாளில் அறிவிக்கப்படும் என நட்டா தெரிவித்தார்.

பாஜவின் கோட்டையில் ஒரு தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் ‘ரெடி’


பாஜவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் அக்கட்சியின் கோட்டையாக கருதப்படும் குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளில் காந்திநகர் தொகுதிக்கு மட்டும் வேட்பாளராக அமித்ஷா அறிவிக்கப்பட்டுள்ளார். மீதமுள்ள 25 தொகுதிக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. மத்தியில் ஆளும் பாஜ தொடர்ந்து ஆட்சி நடத்தி வரும் மாநிலம் குஜராத். இந்த மாநிலத்தில் கடந்த முறை நடந்த மக்களவை தேர்தலில் 26 தொகுதிகளிலும் பாஜ வெற்றி வாகை சூடியது. இந்நிலையில் வரும் மக்களவை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு குஜராத்தில் ஒரே கட்டமாக ஏப்.23ம் தேதி நடக்கிறது.

குஜராத்தில் 26 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை குஜராத் மாநில பாஜ தலைமை இறுதி செய்துள்ளது. குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி, மாநில பாஜ பொறுப்பாளர் ஓம் மாத்தூர், குஜராத் பிரிவு தலைவர் ஜித்து வகானி ஆகிய மூவர் இது தொடர்பாக 3 நாட்கள் நடத்திய கூட்டத்தில் பட்டியலை இறுதி செய்தனர். இந்த பட்டியல் தேசிய தலைவர்களின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் பாஜவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்றிரவு வெளியிடப்பட்டது. இதில் குஜராத் மாநிலத்தில் காந்திநகர் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதில் கட்சியின் தலைவர் அமித்ஷா போட்டியிடுகிறார்.

தமிழகத்தில் யார் யார்?


இதில்  மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியில் மீண்டும் போட்டியிட  வாய்ப்பு வழங்கியுள்ளது. பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்  தூத்துக்குடியில் போட்டியிடுகிறார். அங்கு திமுக சார்பில் கனிமொழி  போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நயினார் நாகேந்திரன்  அதிமுகவில் அமைச்சராக இருந்தவர். அவர் அண்மையில் தான் பாஜகவில் இணைந்தார்.  தற்போது அவருக்கு ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு  வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,Varanasi , Modi, Varanasi
× RELATED மக்களவை தேர்தல்: வாரணாசி தொகுதியில்...