×

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை புகார்கள் சிபிஐக்கு மாற்றப்படும்: சென்னை ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை: பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பான அனைத்து புகார்களும் சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்படும் என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ வெளியாகி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த சம்பவம் நக்கீரன் இதழ் மற்றும் இணையதளத்தில் தொடர்ந்து  வெளியிடப்பட்டது. இதையடுத்து, எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் தனது நற்பெயருக்கும், குடும்பத்திற்கும் களங்கம் ஏற்படுத்தியதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு நக்கீரன் கோபாலுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர்.
மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜராகாத நிலையில் நக்கீரன் கோபால், சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஆஜராகி, இந்த வழக்கு ஏற்கனவே சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதான வழக்கை விசாரிக்கும் சிபிஐயையே பொள்ளாச்சி சம்பவம் தொடர்பான மற்ற வழக்குகளையும் விசாரிக்க வேண்டும் என்பது அரசின் முடிவு. எனவே, மத்திய குற்றப்பிரிவில் கொடுக்கப்பட்ட நக்கீரன் கோபால் மீதான புகார் உட்பட்ட 5 புகார்களும் சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.  தலைமைக் குற்றவியல் வக்கீலின் வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி, பொள்ளாச்சி சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளும் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் இதில் புதிய உத்தரவு எதையும் பிறப்பிக்க வேண்டியதில்லை.

ஒருவேளை விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டால் மனுதாரர் இந்த நீதிமன்றத்தை அணுகலாம் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pollachi ,CBI ,Chennai High Court , Pollachi, sexual abuse ,CBI, Government
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!