×

பிளாஸ்டிக் தடை உத்தரவால் மறுவாழ்வு பெற்ற வாழை விவசாயம் : விவசாயிகள் மகிழ்ச்சி

ஓமலூர்: ஓமலூர் வட்டாரத்தில் தமிழக அரசின் பிளாஸ்டிக் தடை உத்தரவால், வாழை விவசாயம் மறுவாழ்வு பெற்றுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி, கருப்பூர் மற்றும் தாரமங்கலம் வட்டார கிராமங்களில் வாழை விவசாயம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். வாழை விவசாயிகளை வாழ வைக்கும் என்று நம்பிக்கையுடன் நடவு செய்து, பராமரித்து வருகின்றனர். வாழையில் காய்கள், பழம், வாழை பூ, வாழை தண்டு, வாழை மட்டை போன்ற அனைத்தும் வருவாய் தரக்கூடியதாக உள்ளது. அதேபோல், வாழை விவசாயம் சார்ந்த தொழிலான, வாழை இலை வியாபாரம், இந்த பகுதியில் அதிகரித்துள்ளது.

ஓமலூரில் உள்ள வாழை தோட்டங்களை, வாழை இலை வியாபாரிகள் மொத்தமாக குத்தகைக்கு எடுத்து தினம்தோறும் இலைகளை அறுத்து சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைப்பது வழக்கம். இந்த தொழில் தலைமுறை தலைமுறையாக பல ஆண்டுகளாக நடந்து வந்தது. தற்போது வரை சென்னை வியாபாரிகள் 30க்கும் மேற்பட்டோர், வாழை இலை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலையை கத்தரித்து, சாப்பாடு, பிரியாணி, டிபன் என, ரகம் வாரியாக, ஓட்டல், திருமண விஷேசங்களுக்கு அனுப்புவர். ஆனால், கடந்த காலங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு தீவிரமாக அதிகமாக இருந்ததால், இயற்கை பொருட்களில் ஒன்றான, வாழை இலையின் விற்பனை கடுமையாக சரிந்தது.

குறிப்பாக, வாழை இலைக்கு போட்டியாக, வாழை இலை மாதிரியான வடிவத்தில், கம்ப்யூட்டர் பிளாஸ்டிக் இலைகளும் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டதால், வாழை இலையின் விற்பனை வீழ்ச்சியடைந்தது.  இதனால், சென்னை உள்ளிட்ட வெளிமாநில இலை வியாபாரிகள், இலை வாங்குவதை தவிர்த்தனர். இதனால், வாழை விவசாயம் கடுமையாக பாதித்தது. பழத்திற்கு மட்டுமே வாழை நடவு செய்து, விவசாயிகள் நஷ்டமடைந்து வந்தனர். பிளாஸ்டிக்கின் பயன்பாடு அதிகரித்தால், வாழை இலை பயன்பாடு, அடியோடு காணாமல் போகும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்த, தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் முதல் தடை விதித்ததால், ஓட்டல்கள், சாப்பாடு, சிற்றுண்டிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த, பிளாஸ்டிக் கவர்களுக்கு மாற்றாக, வாழை இலைகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

இதனால், துவண்டு போய் கிடந்த, வாழை இலை சில்லரை வணிகம், தற்போது இரு மடங்காக உயர்ந்துள்ளது. ஓட்டல் உரிமையாளர்கள், திருமண வீட்டார்கள் என பலதரப்பினரும், வாழை இலையை நாடி வர ஆரம்பித்துள்ளனர். அதனால், வெளிமாவட்ட, வெளிமாநில வாழை இலை வியாபாரிகள் தற்போது மீண்டும், ஓமலூர், காடையாம்பட்டி வட்டார பகுதிகளுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். அதனால், தற்போது வாழை விவசாயம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழக அரசின் இந்த தடை தொடர வேண்டும். அப்போது தான் பெரும்பாலான பகுதிகளில் வாழை விவசாயமும், அதை சார்ந்த வாழை இலை வியாபாரமும், தழைத்தோங்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : rehabilitation Banana farmers , Plastic, banana, growers
× RELATED திருவாரூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது..!!