ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு ப.சிதம்பரம், கார்த்தியை கைது செய்ய மார்ச் 8ம் தேதி வரை தடை நீட்டிப்பு

புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா, ஏர்செல்-மேக்சிஸ்,  வழக்குகளில்  முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி ஆகியோரை கைது செய்வதற்கான தடையை மார்ச் 8ம் தேதிவரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. ஐஎன்எக்ஸ் மீடியா, ஏர்செல்-மேக்சிஸ்  ஆகிய நிறுவனங்களின் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உட்பட பலர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சிதம்பரம் கடந்தாண்டு மே மாதம் விண்ணப்பித்தார். அப்போது முதல் இவரை கைது செய்வதற்கான தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை கூறி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘‘இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் மார்ச் 5, 6, 7 மற்றும் 12ம் தேதிகளில் ஆஜராக வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே மார்ச் 12ம் தேதிக்குப்பின் இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும்’’ என அமலாக்கத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அப்போது நீதிமன்றத்தில் இருந்த ப.சிதம்பரம், அமலாக்கத்துறை இந்த வழக்கை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக கூறினார். அதன்பின் நீதிபதி சைனி கூறுகையில், ‘‘இருதரப்பும் வழக்கை விரைவாக முடிக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதன் விசாரணை மார்ச் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது’’ என்றார். அதுவரை அவர்களை கைது செய்வதற்கான தடையை நீட்டிக்க வேண்டும் என ப.சிதம்பரத்தின் வக்கீல்கள் கபில் சிபல், மற்றும் சிங்வி ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர்.  இதற்கு நீதிபதி அனுமதி வழங்கினார். மனைவிக்கும் ஜாமீன்: இதற்கிடையே, மேற்குவங்க மாநிலத்தில் நடந்து வரும்் சாரதா சீட்டு நிறுவன வழக்கில் வழக்கறிஞர் நளினி சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. நளினி சிதம்ப ரத்தை கைது செய்யக் கூடாது என்று கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாரதா சீட்டு நிறுவனம் முதலீட்டாளர்களை கோடிக்கணக்கில் ஏமாற்றியதாக வழக்கு தொடரப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED நீட்டிப்பு ஆணை வெளியிடாததால்...