×

புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் காஷ்மீரில் பதுங்கல்? இன்ச், இன்ச்சாக வீரர்கள் தேடல்

புதுடெல்லி: புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி காஷ்மீர் பகுதியில்தான் பதுங்கி உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்தின் மீது வெடிகுண்டு நிரப்பிய வாகனத்தை மோத வைத்து ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். தாக்குதலை நடத்திய அதில் தார் என்ற உள்ளூர் தீவிரவாதியும் உயிரிழந்தான். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு விசாரணை நடத்தி வருகின்றது.இந்நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் ஜெய்ஷ் இ முகமது தளபதி அப்துல் ரசீத் கசி. இவன் இன்னும் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில்தான் பதுங்கி இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகின்றது. தீவிரவாதி அப்துல் ரசீத் கசி, கடந்த டிசம்பர் 9ம் தேதி எல்லையை தாண்டி ஜம்மு காஷ்மீரில் ஊடுருவியுள்ளான். கடந்த 3ம் தேதி அப்துல் ரசீத் பதுங்கி இருக்கும் தகவல் தெரியவந்துள்ளது. அன்றிலிருந்து அவரை பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடி வந்துள்ளனர்.

புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்கு ஒரு நாள் முன்பாக பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டான். சம்பவ இடத்தில் இருந்து அப்துல் ரசீத் கசி தப்பி சென்றுள்ளான் என்பதும் உளவுத்துறை தகவலில் தெரியவந்துள்ளது. ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தளபதி அப்துல் ரசீத் கசி, ஆப்கன் போரில் கலந்து கொண்ட தீவிரவாதி. வெடிப்பொருட்களை தயாரிப்பதில் கைதேர்ந்தவன். இவன்தான் தாக்குதலை நடத்திய, அதில் தாருக்கு பயிற்சி அளித்துள்ளான். 2011ம் ஆண்டு இவன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு திரும்பி வந்துள்ளான். ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவன் மவுலானா மசூத் அசாருக்கு மிகவும் நெருங்கிய மற்றும் நம்பிக்கைக்கு உரியவனாக இருந்து வருகிறான். மசூத் அசாரின் உறவினரான உஸ்மான் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து பழிவாங்கும் திட்டத்தை அரங்கேற்றுவதற்காக அப்துல் ரசித் கசியை, மசூத் அசார் காஷ்மீருக்கு அனுப்பி வைத்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
தற்போது பள்ளத்தாக்கில் பதுங்கி இருக்கும் அப்துல் ரசீத்தை கண்டறிவதற்காக தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகின்றது.

3வது நாளாக ஊரடங்கு உத்தரவு
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை சிஆர்பிஎப் வீரர்கள் மீது வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தை மோதி தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்தது. இதனையடுத்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் கடந்த வெள்ளியன்று ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும் தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டது.

இதற்கிடையே, இயல்பு வாழ்க்கை திரும்ப தேவையான நடவடிக்கைகள் குறித்து மூத்த அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும், தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை அடுத்து ஜம்முவில் உள்ளவர்கள் மற்றும் வெளிமாநிலத்தில் இருக்கும் காஷ்மீர் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து காஷ்மீர் பகுதி முழுவதும் பந்த்க்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இரண்டாவது நாளாக நேற்றும் இந்த பந்த் ெதாடர்ந்தது. நகரில் கடைகள், எரிபொருள் நிலையங்கள் மற்றும் பிற வர்த்தக மையங்கள் மூடப்பட்டு இருந்தன.  வாரச்சந்தை கூட நேற்று நடைபெறவில்லை.

‘போலி படங்களை பரப்ப வேண்டாம்’
காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, போலி படங்களும், பொய் செய்திகளும் சமூக இணையதளங்களில்  வெளியாகி வருகின்றன. மிக மோசமாக சிதைந்த நிலையில் உள்ள உடல்களின் படம், காஷ்மீர் மாணவர்களை தொந்தரவு செய்வது போன்ற செய்திகள் ஆகியவை வாட்ஸ் அப் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக இணையதளங்களில் வெளியிடப்படுகின்றன. இது சிஆர்பிஎப் கவனத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து சிஆர்பிஎப் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், ‘‘வெறுப்பை தூண்டும் முயற்சியாக வீரர்களின் போலி படங்கள், காஷ்மீர் மாணவர்களை தொந்தரவு செய்வது போன்ற பொய் செய்திகளை சமூக விரோதிகள் சிலர் சமூக இணையதளங்களில் பரப்புகின்றனர். வெறுப்பை தூண்டுவதற்காக இந்த முயற்சிகள் நடக்கின்றன. எனவே, பொதுமக்கள் யாரும் தயவு செய்து இது போன்ற படங்கள் மற்றும் செய்திகளை பரப்ப வேண்டாம்’’ என கூறியுள்ளது.

ஜனாதிபதி கண்டனம்
அரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் நேற்று நடந்த 4வது வேளாண் மாநாட்டில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார். அப்போது புல்வாமா தாக்குதல் குறித்து பேசிய அவர், ‘‘மூன்று நாட்களுக்கு முன் நடந்த கோழைத்தனமான தாக்குதலில், துணை ராணுவப்படையைச் சேர்ந்த நமது வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை நாட்டு மக்களுடன் சேர்ந்து, நானும் வன்மையாக கண்டிக்கிறேன். உயிர்நீத்த தியாகிகளுக்கு ஒட்டு மொத்த நாட்டின் சார்பாக, நான் அஞ்சலி செலுத்துகிறேன். இது போன்ற சவால்களை நாம் தைரியத்துடனும், பொறுமையுடனும் சந்தித்துள்ளோம். இதுபோன்ற சவால்களை சந்திக்கும்போது, நாம் முழு வேகத்துடன் முன்னேறியுள்ளோம். அதேபோல் எதிர்காலத்திலும் செயல்படுவோம்’’ என கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : brainchild ,attack ,Pulwama ,Kashmir ,Inch , Sneaker,Kashmir,Pulwama attack,acted,brain,Inch,search
× RELATED கடை ஊழியர் மீது சரமாரி தாக்குதல்: வாலிபர் கைது