×

ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட பைக்கை திருடியதால் போலீசில் சிக்கிய ஆசாமிகள்: செல்போன், செயின் பறிமுதல்

சென்னை: கீழ்ப்பாக்கம், மேடவாக்கம் பாங்க் ரோட்டை சேர்ந்தவர் புஷ்பராஜ் (22), தனியார் நிறுவன ஊழியர். இவர், பாதுகாப்பு வசதிக்காக தனது பைக்கில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தியிருந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் தனது பைக்கை வீட்டு முன் நிறுத்தி இருந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை ஜிபிஎஸ் கருவி மூலம் புஷ்பராஜ் செல்போனில் அலாரம் அடித்தது. திடுக்கிட்டு எழுந்த அவர், வெளியில் வந்து பார்த்தபோது, 2 ஆசாமிகள் அவரது பைக்கை திருடிக் கொண்டு சென்று தப்பியது தெரிந்தது. உடனே புஷ்பராஜ் இதுபற்றி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், தலைமை செயலக காலனி இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி இதுபற்றி விசாரித்தார். பைக்கில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருந்ததால் காவல் கட்டுப்பாட்டு அறை உதவியுடன் பைக் ஆசாமிகள் செல்லும் வழியை போலீசார் கண்காணித்தனர். போலீசார் தங்களை பின் தொடர்வது தெரியாமல் பைக் ஆசாமிகள், சாலையில் நடந்து செல்பவர்களின் செல்போனை பறித்துக்கொண்டு சென்று கொண்டிருந்தனர். சினிமாவில் வில்லனை விரட்டும் ஹீரோவைப் போல் போலீசார் பைக் ஆசாமிகளை விரட்டினர்.

கிழக்கு கடற்கரை சாலை கூவத்தூர் அருகே அவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.  அதில், திரு.வி.க.நகரை சேர்ந்த நாகசூர்யா (23), கோட்டூர்புரத்தை சேர்ந்த வினோத் (21) என்பதும், நண்பர்களான இவர்கள் பல இடங்களில் பைக் திருடி வந்ததும், சாலையில் நடந்து செல்வோர்களிடம் நகை, செல்போன் பறித்து வந்ததும் தெரிந்தது. இருவர் மீதும் பைக் திருட்டு, வழிப்பறி, செயின் பறிப்பு உள்ளிட்ட வழக்குகள் பல காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும்  பைக்கை பறிமுதல் செய்தனர். பைக்கில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருந்ததால் பைக் திருடு போன நான்கு மணி நேரத்தில் போலீசார் கொள்ளையர்களை சுற்றிவளைத்து பிடித்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : robbery ,Chhattisgarh , GPS, bike, police, Cellphone, Chain snatching
× RELATED சத்தீஸ்கர் கான்கேர் மாவட்டத்தில் 8...