×

முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் நிறைவு பயணிகளின் எண்ணிக்கை 90 ஆயிரமாக அதிகரிப்பு: டிஎம்எஸ்-வண்ணாரப்பேட்டை இணைப்பால் ஆர்வம்

சென்னை: சென்னையில் 45 கி.மீட்டர் தூரத்திற்கான மெட்ரோ ரயில் திட்டம் முழுமை பெற்றதையடுத்து, தினமும் பயணிப்பவர்களின் எண்ணிக்கை தற்போது 90 ஆயிரமாக அதிகரித்துள்ளது. விரைவில் 2 லட்சமாக மாறும் என மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் 45 கி.மீட்டர் தூரத்திற்கான மெட்ரோ ரயில் திட்டம் முழுமை பெற்று கடந்த 10ம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இதையடுத்து 10ம் தேதி முதல் 13ம் தேதி வரையில் அனைத்து வழித்தடங்களிலும் பொதுமக்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்டனர். இலவச சேவையால் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரையில் 4 நாட்களில் மட்டும் 7 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்நிலையில், 14ம் தேதி முதல் வழக்கமான கட்டணத்துடன் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். மேலும், டி.எம்.எஸ் முதல் வண்ணாரப்பேட்டை இடையிலான வழித்தடத்தில் முன்பு இருந்ததை விட தற்போது பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

முன்னதாக, சின்னமலை - சென்ட்ரல், சென்ட்ரல் - விமானநிலையம் இடையிலான 35 கி.மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும்போது தினமும் 50 ஆயிரம் பேர் பயணித்து வந்தனர்.
தற்போது, வண்ணாரப்பேட்டை வரையில் முழுமையாக நீட்டிக்கப்பட்டுள்ளதால் தினமும் 85ல் இருந்து 90 ஆயிரம் பயணிகள் வரையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். இதேபோல், விரைவில் தினமும் 2 லட்சம் பயணிகள் வரை பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:
மெட்ரோ ரயில் முதல்கட்ட திட்டம் முடிந்தநிலையில் நாள்தோறும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, விமானநிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை செல்பவர்களுக்கும், அலுவலகங்களுக்கு செல்பவர்களுக்கும் இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தற்போது 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இது விரைவில் படிப்படியாக அதிகரித்து 2 லட்சத்திற்கும் மேல் வரும் என எதிர்பார்க்கிறோம். 70 ரூபாயில் இருந்து 60 ரூபாயாக குறைக்கப்பட்ட பிறகு ரயில் சேவையை அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக வண்ணாரப்பேட்டை வரையில் சேவை நீட்டிக்கப்பட்ட பிறகு அப்பகுதி மக்கள் சேவையை கணிசமாக பயன்படுத்துகின்றனர். இவ்வாறு கூறினார்.

மெட்ரோ ரயில் நிலையங்களில் சுற்றுலா அட்டை
சென்னைக்கு வரும் சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் கவரும் வகையில் சுற்றுலா பயண அட்டை என்ற திட்டத்தை கடந்த 2015ம் ஆண்டு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின்படி ₹150 செலுத்தி சுற்றுலா பயண அட்டையை பயணிகள் பெற்றுக்கொள்ளலாம். இதில் 50 முன்பணமாக எடுத்துக்கொள்ளப்படும். இந்த அட்டையை பயன்படுத்தி ஒருவர் ஒரு நாளில் பலமுறை பயணம் செய்ய முடியும். ஒருநாள் மட்டுமே இந்த அட்டை செல்லுபடியாகும். இந்த திட்டம் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல், இந்த கார்டை பயன்படுத்தி குழு டிக்கெட் எடுப்பவர்களுக்கு 10 சதவீதம் கட்டண சலுகையும் அளிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Metro Train Scheme , First Premier Metro Rail Project, TMS-Wormhole
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...