×

மத்தியிலும், தமிழகத்திலும் கொடுமையான ஆட்சி நடக்கிறது: ஊராட்சி சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

செம்பட்டி: மத்தியிலும், தமிழகத்திலும் கொடுமையான ஆட்சி நடக்கிறது என நிலக்கோட்டை அருகே நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே பள்ளப்பட்டியில் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். முன்னதாக, கூட்டம் துவங்குவதற்கு முன்பு ஜம்மு காஷ்மீரில் தற்கொலை படை தாக்கியதில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் பலியாகி உள்ளனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்களும் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த வீரர்கள் அனைவரின் குடும்பத்தினருக்கு, இந்த ஊராட்சி சபை சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி அரசு, ஆட்சியின் 2ம் ஆண்டு கொண்டாட்டத்தை நடத்தி கொண்டிருக்கிறது.

கடந்த ஜனவரி 3ம் தேதி இந்த பயணத்தை தொடங்கினோம். தமிழகம் முழுவதும் 90 சதவீதத்திற்கு மேல் கூட்டங்களை நடத்தி உள்ளோம். இந்தியாவில் வேறு எங்குமே இது மாதிரியான கிராமசபை கூட்டத்தை யாருமே நடத்தியது கிடையாது. மக்களுக்கு பயனளிக்கக் கூடிய வகையில் இதுபோன்ற கூட்டத்தை திமுக நடத்தி வருகிறது. மத்தியில் மோடி தலைமையிலும், தமிழகத்தில் அதிமுக தலமையிலும் கொடுமையான ஆட்சி நடக்கிறது. ஆட்சி முடிய போகும் நிலையில், 2 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம் என அறிவிக்கின்றனர். ஓட்டுகளை பெறுவதற்காக இப்படி அறிவித்துள்ளனர். தொழிற்சாலைகளை துவக்கவில்லை.  பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கவில்லை. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, ஆரம்ப பள்ளிக்கூடங்களில் பெண்களையே ஆசிரியர்களாக நியமிப்பது போன்ற திட்டங்கள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கான சுழல் நிதி போன்ற அருமையான திட்டங்களை திமுக ஆட்சியில் கொண்டு வந்தோம்.

திமுக ஆட்சிக்கு வந்த பின்னரே விவசாயிகளுக்கு கடன், இலவச மின்சாரம் போன்ற உதவிகளை வழங்கினோம். கிராமங்களில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற, உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டியது அவசியம். திமுக ஆட்சிக்கு வந்ததும், முதல் வேலையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், நிலக்கோட்டை ஒன்றியத்தின் பல்வேறு கிராம ஊராட்சிகளை சேர்ந்த 25 பேருக்கும் மேற்பட்ட பெண்கள், குடிநீர், கழிவுநீர் கால்வாய், மயானம், திருமண மண்டபம் வசதிகள் கோரி மனு அளித்தனர். கூட்டத்தில், மாநில துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி, திண்டுக்கல் மாவட்டச் செயலாளர்கள் ஐ.பி.செந்தில்குமார், அர.சக்கரபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கமிஷன், கலெக்‌சன், கரப்ஷன் ஆட்சி- ஸ்டாலின் விளாசல்
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் நடந்த வாக்குச்சாவடி முகவர் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மேற்கு வங்கத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய தலைவர்கள், ‘ஊராட்சி சபை கூட்டத்தால் என்ன லாபம்’ என்றனர். தமிழகத்தில் கட்டமைப்பு உள்ள ஒரு கட்சி திமுகதான். இதனால் கிராமங்களின் நாடித்துடிப்பை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கும் என்றேன். 18 எம்எல்ஏக்களின் பதவியை, சபாநாயகர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பறித்தார். அந்த தொகுதி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். ஓசூர் தொகுதி சட்டசபையை காலியாக உள்ளதாக சபாநாயகர் இன்னும் அறிவிக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தல் வருகிறதா அல்லது மீண்டும் 234 தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தல் வர உள்ளதா என்பது தெரியவில்லை. கமிஷன், கலெக்சன், கரப்ஷனோடு எடப்பாடி ஆட்சி நடந்து வருகிறது. உடனடியாக அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டிய சூழல் உள்ளது. பொதுமக்களே அதிகம் எதிர்பார்த்து உள்ளனர்.

மக்கள் என்னிடத்தில், ‘எப்போது இந்த ஆட்சியை கவிழ்க்க போகிறீர்கள்’ என கேள்வி கேட்கின்றனர். அந்தளவிற்கு கொடுமையான ஆட்சி நடந்து வருகிறது. அதிமுக ஆட்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பினாமிகளுக்கு ஒப்பந்தங்களை கொடுக்கிறார். குட்கா ஊழல், திட்டப்பணிகளுக்கு லஞ்சம் என சகட்டுமேனிக்கு ஊழல் நடக்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி கொடநாட்டில் கொலை நடந்தது. அதை மறைப்பதற்காக 5 கொலைகள் நடந்தன. இதனால் முதல்வரை, ‘அஞ்சு கொலை எடப்பாடி’ என அழைக்கலாம். ஜெயலலிதாவிடம் பணிவாக இருந்தவர், சசிகலாவிடம் தவழ்ந்து சென்று பதவியை பிடித்தவர் முதல்வர். கொலை செய்த குற்றத்திற்காக விரைவில் சிறைக்கு செல்ல உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamil Nadu ,MK Stalin ,council meeting ,Panchayat ,speech , Massive Governance, Panchayat Council Meeting, MK Stalin's Speech
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...