×

டிஐஜி பேச்சுவார்த்தையில் உடன்பாடு சிறையில் நளினி- முருகன் உண்ணாவிரதம் வாபஸ்

வேலூர்: வேலூர் சரக சிறைத்துறை டிஜஜி பேச்சுவார்த்தையில் 2 நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டதால் நளினி- முருகன் உண்ணாவிரதத்தை நேற்று வாபஸ் பெற்றுக்கொண்டனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான  7 பேர் கடந்த 27 ஆண்டுகளாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விடுதலை குறித்து கவர்னர் முடிவெடுக்க சுப்ரீம் கோர்ட் அறிவித்தது. ஆனால் இதுவரை எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன், விடுதலை குறித்து கவர்னர் உடனடி முடிவெடுக்க வேண்டும் என்று கடந்த 7ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்தார். அதேபோல் அவரது மனைவி நளினியும் கடந்த 9ம் தேதி முதல் பெண்கள் தனிச்சிறையில் உண்ணாவிரதத்தை தொடங்கினார். ேமலும் கவர்னருக்கும் நளினி உருக்கமான கடிதமும் அனுப்பி வைத்தார். இதில் முருகன் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டதால் 2 நாட்களுக்கு முன்பு சிறை மருத்துவமனையில் 2 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.

நளினி-முருகனை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் 2பேர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நளினியின் தாய் பத்மா நேற்று நளினியை சந்திக்க வந்தார். ஆனால் சிறை விதிகளை மீறி நளினி உண்ணாவிரதம் இருப்பதால் பார்வையாளர்கள் சந்திக்கும் சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டனர்.  இந்நிலையில் சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நளினிக்கு பரோல் வழங்க வேண்டும். சோதனை என்ற பெயரில் சிறையில் உள்ள கோயிலின் பூட்டை உடைக்க கூடாது என்று 2 நிபந்தனைகளை வைத்தார்.  அந்த நிபந்தனைகளுக்கு டிஐஜி ஒப்புக்கொண்டதன் பேரில், முருகன் இளநீர் குடித்து உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். பின்னர், பெண்கள் சிறையில் உள்ள நளினிக்கு இதுகுறித்து கடிதம் எழுதினார். அந்த கடிதம் கிடைத்தவுடன் நளினியும் இளநீர் குடித்து உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nalini-Murugan ,talks ,DIG , DIG Talk, Prison, Nalini- Murugan, Fasting withdrawal
× RELATED மேற்கு வங்க டிஐஜி நீக்கம்: தேர்தல் ஆணையம் அதிரடி