×

பாஜவுடன் கூட்டணி விவகாரம் : அமைச்சர் ஜெயக்குமார்- தம்பித்துரை கடும் மோதல்

சென்னை: தேர்தல் கூட்டணி அமைப்பதில் அதிமுக திறந்தமனதுடன் இருக்கிறது என்று  அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார்.
இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:அ.தி.மு.க.வை உடைக்கணும், அதை இல்லாமல் செய்துவிட வேண்டும் என்று யார் நினைத்தாலும் சரி, அது முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதா கஷ்டப்பட்டு வளர்த்த இயக்கம் எந்த வகையிலும் உடையக்கூடாது. இந்த இயக்கம் ஆலமரம் போல் எல்லோருக்கும் நிழல் தரக்கூடிய மரமாக இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் எண்ணம்.கொடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை உள்பட எந்த விசாரணைக்கும் நாங்கள் தயங்கவில்லை. மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம் இருக்க வேண்டும். எந்த விசாரணைக்கும் அதிமுகவோ, ஜெயலலிதாவின் அரசோ அஞ்சப்போவது இல்லை.

நடிகர் அஜித் தொழில் பக்தி உள்ளவர். அவருடைய தைரியம் பாராட்டத்தக்கது. என்னுடைய ஆதரவு யாருக்கும் இல்லை என்று திறந்த மனதோடு அவருடைய நிலையை வெளிப்படுத்தி இருக்கிறார். அது நல்ல விஷயம்தான். வருவாரா, வரமாட்டாரா? என்று இல்லாமல் தெளிவான பதிலை அஜித் கூறி இருக்கிறார்.அரசு ஊழியர்களுடன் பாசப்பறவைகள் போல நாங்கள் இருக்கிறோம். ஆனால் அவர்கள் எங்களை புரிந்து கொள்ளவில்லை. நிதி பற்றாக்குறை இருக்கிறது என்று சொன்னோம். அவர்கள் எங்களுடைய உடன்பிறவா சகோதரர்கள். அவர்களுக்கு நிறைய செய்ய வேண்டும் என்று ஆசை எங்களுக்கு இருக்கிறது. ஆசைக்கு ஏற்றாற்போல் நிதியும் இருக்க வேண்டும் அல்லவா? சட்டியில் இருந்தால் தான் அகப்பைக்கு வரும். அரசு ஊழியர்களுக்கு எதையெல்லாம் செய்ய முடியுமோ? அதை செய்து கொண்டு தான் இருக்கிறோம். எனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அரசின் நிலை உணர்ந்து பணிக்கு திரும்ப வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

தம்பிதுரை பேட்டி:

மக்களவை தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிடும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சூசகமாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:தேர்தல் அறிவித்த பிறகுதான் யாருடன் கூட்டணி என்று கட்சி அறிவிக்கும். அதிமுக இதுவரை எந்த கூட்டணியிலும் இல்லை. கூட்டணி பற்றி தேர்தல் வரும்போது சொல்லலாம். மத்திய அரசுடன் மாநில அரசு நட்புடன்தான் உள்ளது. நாங்கள் கேட்கின்ற சில தேவைகள் பூர்த்தி ஆகவில்லை. மத்திய அரசு கோர்ட் உத்தரவை மீறி மேகதாதுவில் அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கியது தவறு என்பதுதான் அதிமுகவின் கொள்கை. அதனால்தான் எம்பிக்கள் வற்புறுத்தி போராடினோம். விரிவான திட்ட அறிக்கை அனுமதியை வாபஸ் பெற சொன்னோம். இதுகுறித்து நாங்கள் பேசினால் பாஜவை தாக்கி பேசுவதாக கூறுகிறார்கள். தமிழகத்தின் நலனுக்காக, அவர்கள் செய்ததை தவறு என்றுதான் சுட்டி காட்டுகிறோம். இதற்காகதான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தோம். இதற்காக சஸ்பெண்ட் செய்தவர்களை மீண்டும் அழைக்க வேண்டும் என்று கூட நான் வலியுறுத்தினேன். ஆனால், ஒரு தேசிய கட்சி கூட ஆதரவு தரவில்லை. நாங்கள் பாதிக்கும்போது பாஜ உட்பட எந்த கட்சியினரும் வரவில்லை என்பதை தான் நான் குறிப்பிட்டேன். இதை கூறினால், பாஜவுடன் கூட்டணியா, இல்லையா என்று கேட்கின்றனர். இப்போதைய சூழ்நிலையில் நாங்கள் தனித்து செயல்பட்டு வருகிறோம். தேர்தல் வரும்போது எங்கள் கட்சி செயற்குழு கூடி முடிவெடுப்பார்கள். அதை செயல்படுத்துவதற்காக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் தரப்படும். அவர்கள்தான், கூட்டணி குறித்து கூறுவார்கள்.

கூட்டணி தேவையா, இல்லையா என்பதை கட்சிதான் முடிவு செய்யும். கடந்த 2009, 2011, 2014, 2016ல் தனித்து போட்டியிட்டு வெற்றிகண்டவர்கள். அவ்வளவுதான் சொல்ல முடியும்.அதிமுகவை நாங்கள் வளர்க்கத்தான் பார்ப்போம். மற்ற கட்சியை வளர்ப்பதற்கு நாங்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள், கட்சியை அவர்கள் வளர்ப்பார்கள். அவர்களுக்கு திறமை இருக்கிறது. எங்கள் கட்சியில் உள்ள கருத்தை சொல்ல எங்களுக்கு தான் உரிமை உள்ளது. தம்பிதுரை, எடப்பாடி, வைத்திலிங்கம் கருத்து சொல்ல உரிமை இருக்கிறதா, இல்லையா என்பதை கேட்க, தமிழிசைக்கு அந்த உரிமை கொடுத்தது யார், அதேபோன்று அவர்களது கட்சியில் எச்.ராஜா, இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்னண் ஆளாளுக்கு ஒரு கருத்தை சொல்லும்போது நாங்கள் ஏதாவது கேட்கிறோமா. எங்கள் கட்சி விவகாரத்தில் அவர்கள் மூக்கு நுழைப்பது தவறு. தமிழகத்தை சேர்ந்த பாஜ தலைவர்கள் தங்களது கட்சியை வளர்க்க ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் திராவிட கட்சிகள் இனிமேல் இருக்காது என்று கூறுகின்றனர். அமித்ஷா தமிழகத்தில் ஊழல் பெருகி விட்டது என்று கூறுகிறார். பொன்.ராதாகிருஷ்ணன் இந்த அரசு செயல்படாத அரசு எனக்கூறுகிறார். இப்படி, அவர்கள் பேசியதை கேட்டு மவுனியாக இருக்க வேண்டுமா. எங்களை பற்றி அவர்கள் கூறும்போது, வாயை மூடி நான் மவுனியாக இருக்க தயாராக இல்லை. ஜெயலலிதா உருவாக்கிய மக்கள் கட்சியை யார் குறை கூறினாலும் நான் கண்டித்து பேசுவேன். நீட் கொண்டு வந்த அவர்கள் அதுகுறித்து ஏன் பேச தயங்குகின்றனர். மத்திய அரசு கொண்டு வரும் சட்டத்தால் நாங்கள்தான் கஷ்டப்பட்டு வருகிறோம். சிவகாசி பட்டாசு ஆலை விவகாரம் தொடர்பாக தீர்வு காணுமாறு மத்திய அமைச்சரை சந்தித்து பேசியுள்ளோம். பட்டாசு ஆலை தொழிலாளர்களை காப்பாற்ற வேண்டியது எங்களது கடமை.இவ்வாறு அவர் பேசினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jayakumar-Thambuthurai ,Bhajan , Electoral Alliance, AIADMK, Minister Jayakumar, Thambuthurai
× RELATED திமுக அளித்த புகாரில் ஒன்றிய...