×

திமுக அளித்த புகாரில் ஒன்றிய இணையமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை எடுக்க கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: ஒன்றிய அமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பெங்களூரு நசரத்பேட்டையில் ஒரு கடையில் அனுமன் பஜனை பாடல் விஷயத்தில் கடையின் உரிமையாளரை சிலர் தாக்கினர். இந்த சம்பவத்தை கண்டித்து பா.ஜனதா சார்பில் நேற்று அந்த பகுதியில் போராட்டம் நடந்தது. இதில் ஒன்றிய அமைச்சர் ஷோபா உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய அமைச்சர் ஷோபா, பெங்களூரு விதான சவுதாவில் சிலர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிடுகிறார்கள்.

அவர்கள் மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் பயிற்சி பெற்று அங்கிருந்து வந்து கர்நாடகத்தில் வெடிகுண்டு வைக்கிறார்கள். அவர்கள் மீதும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்திருந்தார். அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.அவரது இந்த கருத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். ஒன்றிய அமைச்சர் ஷோபா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் சமூக வலைதள பதிவில் வலியுறுத்தி இருந்தார்.

ஒன்றிய அமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் இன்று திமுக புகார் அளித்தது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேசியது தொடர்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்த மனுவை தேர்தல் ஆணையத்திடம் அளித்தார். இந்த நிலையில் ஒன்றிய அமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை எடுக்க இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திமுக புகார் அளித்த நிலையில் புகார் மீது கர்நாடகா தலைமை தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், 48 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

The post திமுக அளித்த புகாரில் ஒன்றிய இணையமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை எடுக்க கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Chief Electoral Officer ,Karnataka ,Union Internet Minister ,Shoba ,Dimuka ,Chennai ,Union Minister ,Anuman Bhajan ,Nasaratpet, Bengaluru ,Janata ,Union Internet Minister Shoba ,Dhimuka ,Dinakaran ,
× RELATED வாக்குச்சாவடி வரிசை நிலை இணைப்பு மூலம் அறிய புதிய வசதி