×

பெங்களூரு சிறையில் 2-வது நாளாக விசாரணை : பினாமி சொத்து குறித்து சசிகலா பரபரப்பு வாக்குமூலம்

பெங்களூரு: பினாமி சொத்துக்கள் குறித்தும், வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்தும் சசிகலா வருமான வரித்துறை அதிகாரிகளிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.சென்னை போயஸ் கார்டன் மற்றும் சசிகலா உறவினர்களுக்குச் சொந்தமான வீடு, அவர் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள் உள்பட 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்தாண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி சோதனை நடத்தினர். அதில் 60க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் தொடங்கி நடத்தி வருவது, 150க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளில் பண பரிமாற்றம் செய்துள்ளது உள்பட ரூ.3000 கோடிக்கும் அதிகம் சொத்து சேர்த்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இப்புகார் தொடர்பாக சசிகலாவின் ரத்த சம்மந்தமான உறவினர்கள், நிறுவனங்களின் பங்குதாரர்கள் உள்பட பலரிடம் ஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சிறையில் உள்ள சசிகலாவிடம் மட்டும் விசாரணை நடத்தாமல் இருந்தனர்.சசிகலாவிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்கக்கோரி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளருக்கு ஐடி அதிகாரிகள் கடிதம் எழுதினர். அதை பரிசீலனை செய்த சிறை அதிகாரிகள் சசிகலாவிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்கினர். அதை தொடர்ந்து நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்னை வருமான வரித்துறை இணை இயக்குனர் வீரராகவராவ் தலைமையில் பெண் உள்பட 7 அதிகாரிகள் வந்து சசிகலாவிடம் தனி அறையில் விசாரணை நடத்தினர். காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 7.30 மணி வரை சுமார் எட்டரை மணி நேரம் நடைபெற்றது.

விசாரணையின்போது வருமானத்திற்கும் அதிகம் சொத்து சேர்த்தது, போலி நிறுவனங்கள் பதிவு செய்து, அதன் வங்கி கணக்கில் பல கோடி பண பரிமாற்றம் செய்தது, வருமான வரி ஏய்ப்பு செய்தது உள்பட நூற்றுக் கணக்கான கேள்விகளை எழுப்பி அவரிடம் பதில் பெற்றனர். விசாரணை முழுமை பெறாததால் இரண்டாவது நாளாக நேற்று காலை 9.30 மணிக்கு மீண்டும் வருமானவரி அதிகாரிகள் சிறைக்கு சென்று 10 மணிக்கு விசாரணை நடத்தினர். ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த கேள்விகளை அதிகாரிகள் கேட்க சசிகலா ஆம், இல்லை என்று அதற்கு பதிலளித்தார். சில கேள்விகளுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் திணறினார். நேற்றும் 8 மணி நேரம் விசாரணை நடத்திய அதிகாரிகள் அனைத்து கேள்விகளுக்கும் விடை பெற்றுக்கொண்டு சிறையில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

சசிகலாவிடம் நடத்திய விசாரணையை வருமான வரித்துறை அதிகாரிகள் வீடியோ எடுத்தனர். அவரது வாக்குமூலத்தை டைப் செய்தனர். சிறைத்துறை அதிகாரிகளிடம் பிரிண்டர் வாங்கி, வாக்குமூலத்தை பிரிண்ட் எடுத்தனர். அதில் ஒவ்வொரு பக்கத்திலும் சசிகலாவின் கையெழுத்தைப் பெற்றனர். இந்த விசாரணை மூடிய அறையில் நடந்தது. மேலும் இதுகுறித்து வெளியில் எதுவும் தெரிவிக்கக் கூடாது என்று வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் போயஸ்கார்டனில் வீட்டில் ஏராளமான பினாமி நிறுவனங்களின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது குறித்து அவரிடம் தொடர்ந்து கேள்விகளை கேட்டதாக கூறப்படுகிறது. அவர் கூறிய தகவல்களை அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர். இந்த விசாரணையின்போது தேவையான தகவல்கள் தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும், மேலும் தேவைப்படும் போது மீண்டும் சசிகலாவிடம் விசாரணை நடத்துவோம் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வீிடியோவில் பதிவு
 நேற்று முன்தினம் சசிகலாவிடம் 500 கேள்விகள் கேட்கப்பட்டு அதை வீடியோவில் பதிவு செய்த அதிகாரிகள் சில ஆவணங்களில் அவரிடம் கையெழுத்து பெற்றுக்கொண்டனர்.
 இதே போன்று நேற்றும் 500 கேள்விகளுடன் தயாராக வந்த அதிகாரிகள், காலையில் 300 கேள்விகளையும், உணவு இடைவெளிக்கு பிறகு 200 கேள்விகளையும் கேட்டு பதில் பெற்றனர். பிறகு அதை ஆவணமாக தயாரித்து சசிகலாவிடம் கையெழுத்து பெற்றுக்கொண்டனர்.
 விசாரணையை மாலை 5.30 மணிக்கு முடித்துவிட்ட அதிகாரிகள் சிறையில் இருந்து 6.30 மணிக்கு தான் வெளியே வந்து புறப்பட்டு சென்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : trial ,jail ,Bangalore ,Sasikala , Prosecution Property, Sasikala, Income Taxes
× RELATED புழல் சிறையில் பரபரப்பு காவலருக்கு...