×

சுலிவாடி மாரம்மா கோயிலில் பிரசாதம் சாப்பிட்ட பக்தர்கள் 13 பேர் பரிதாப பலி

சாம்ராஜ்நகர்: சாம்ராஜ்நகர் மாவட்டம் கிச்சுகிச்சு மாரம்மா கோயிலில் பிரசாதம்  சாப்பிட்ட பக்தர்கள் 13 பேர் பரிதாபமான பலியான சம்பவம் கர்நாடக மாநிலத்தில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு முதல்வர்  குமாரசாமி ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கி உத்தரவிட்டுள்ளார். சாம்ராஜ்நகர்  மாவட்டம், கொள்ளேகால் தாலுகா, சுலிவாடி கிராமத்தில் உள்ளது கிச்சுகிச்சு  மாரம்மா கோவில். இந்த கோயிலில் கடந்த சில நாட்களாக கோபுரம் பராமரிப்பு  பணிகள் நடந்தது. இந்நிலையில் நேற்று பணிகள் நிறைவடைந்து கோபுர கலசங்கள்  நிறுவப்பட்டன. கலசங்கள் வைப்பதில் அதே பகுதியை சேர்ந்த சின்னப்பா,  மகாதேவப்பா ஆகியோரிடையே போட்டி ஏற்பட்டது.  

அப்போது இவர்களுக்குள்  வாக்குவாதம் ஏற்பட்டது. பக்தர்கள் எப்படி வருகிறார்கள், பிரசாதம்  சாப்பிட்டு விட்டு செல்கிறார்கள் என்று பார்க்கிறேன் என்று ஒருவருக்கு  ஒருவர் சவால் விட்டுக்கொண்டனர். இதையடுத்து இருவரையும் தவிர்த்து ஊர் மக்கள்  சார்பில் கோபுர கலசம் நிறுவப்பட்டது. இதையடுத்து நேற்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் கர்நாடகா மற்றும் தமிழகத்தை ேசர்ந்த ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர்  பக்தர்களுக்கு பிரசாதமாக தக்காளி சாதம், பஞ்சாமிர்தம் ஆகியன வழங்கப்பட்டது. இதை வாங்கி சாப்பிட்ட சுமார் 80க்கும் மேற்பட்ட பக்தர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். இதை கண்டு அதிச்சி அடைந்த சக பக்தர்கள் உடனே  போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

 தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஆம்புலன்சுடன் வந்த போலீசார் வந்தனர். அதற்குள் ஒரு சிறுவன் உள்பட ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.   
மேலும் 65 பேர் மயக்கமடைந்தனர். அவர்கள் அனைவரையும் போலீசார் ஆம்புலன்ஸ்  உதவியோடு மீட்டு ஹனூர், கொள்ளேகால், சாம்ராஜ்நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள  அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். மேலும் சம்பவ  இடத்திற்கு மாவட்ட கலெக்டர் பிபி காவேரி, எஸ்பி தர்மேந்திரகுமார் மீனா  உள்ளிட்டோர் வந்து விசாரணை மேற்கொண்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பக்தர்களில் மேலும் 6 பேர் சிகிச்சை  பலனின்றி உயிரிழந்தனர். மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று  வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நள்ளிரவில் பலி எண்ணிக்கை அதிகரிக்க  கூடும் என்று அஞ்சப்படுகிறது. பிரசாதத்தில் விஷம் கலந்ததால் தான் உயிரிழப்பு  ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பிரசாத மாதிரியை  கொள்ளேகால் தாலுகா சுகாதாரத்துறை அதிகாரி கோபால் ஆய்வு செய்ய ஆய்வகத்திற்கு  அனுப்பி வைத்துள்ளார்.
மேலும் சிகிச்ைச பெற்று வருபவர்களில் பலர்  தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பாக  மகாதேவப்பா, சின்னப்பா இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

₹5 லட்சம் நிவாரணம்: சாம்ராஜ்நகரில் பிரசாதம் சாப்பிட்டு பக்தர்கள் உயிரிழந்த தகவலறிந்து முதல்வர் குமாரசாமி வேதனை அடைந்தார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டதுடன் அவர்களுக்கு நிவாரண நிதியாக தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். நேற்றிரவே சம்பவயிடத்துக்கு விரைந்து சென்ற குமாரசாமி அப்பகுதியை பார்வையிட்டு கலெக்டர் மற்றும் போலீஸ் கண்காணிப்பாளிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

300 காகங்கள் பலி
கோயிலை  சுற்றித்திரிந்த காகங்கள் ஆங்காங்கு சிந்திக்கிடந்த  பிரசாதத்தை சாப்பிட்டன. இதில் 300 காகங்கள்  பரிதாபமாக உயிரிழந்தன. கொத்துக் கொத்தாக கோயில் பிராகாரத்திலும், அருகே உள்ள இடங்களிலும் காகங்கள் மடிந்து கிடந்தன.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : devotees ,Sulivadai Maramma Temple , Samrajnagar, Maramma temple, offering, poison
× RELATED திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம்: 18 மணிநேரம் காத்திருந்து தரிசனம்