×

திருச்செந்தூர் பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு: 15 நாட்களுக்கு ஒரு முறை சப்ளையாகும் அவலம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் பேரூராட்சியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளையாவதால் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். திருச்செந்தூர் பேரூராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டங்களின் கீழ் குரங்கணி, ஆத்தூர் ஆற்றுப்படுகைகளிலிருந்து திருச்செந்தூருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதுதவிர கானத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதிலிருந்து எடுக்கப்படும் தண்ணீரும் திருச்செந்தூர் பேரூராட்சியை வந்தடைகிறது. முன்பு மூன்று நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த குடிநீர், தற்ேபாது 15 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. அதுவும் உறுதியற்ற நிலையில் தான் இருக்கிறது. பேரூராட்சியில் தண்ணீர் சப்ளையை கண்காணிக்க முனியாண்டி என்பவர் குழாய் ஆய்வாளராக பணியாற்றினார். அவர் இறந்து விட்டதால் அந்தப் பணியிடத்திற்கு ஆள் நியமிக்கப்படவில்லை. இதனால் 21 வார்டுகளுக்கும் ஒழுங்காக தண்ணீர் வழங்கப்படுவதில்லை. ஆனால் தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் தண்ணீர் செழிப்பாக வழங்கப்படுகிறது.

மேலும் ஆங்காங்கே குழாய்கள் உடைந்தும் தண்ணீர் வீணாக தெருவில் பெருக்கெடுத்து ஓடுகிறது. 2 நாட்களுக்கு முன்பு சன்னதி தெரு பகுதியில் ஆத்தூரிலிருந்து வரும் குழாய் உடைந்து தண்ணீர் தெருக்களில் வெள்ளமாக பெருக்கெடுதது ஓடியது. அதை சீரமைக்க 3 நாட்களாகி விட்டது. அதன் பின்னர் சோனகன்விளையில் குரங்கனியிலிருந்து வரும் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக தெருக்களில் ஓடியது. இதையும் பழுதுபார்க்க 4 நாட்களாகி விட்டது.இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள புறவழிச்சாலையில் ஆத்தூரிலிருந்து வரும் குழாய் உடைந்து தண்ணீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதே போல் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை இயக்கும் ஆபரேட்டர்கள் சில நேரங்களில் மோட்டாரை போட்டு விட்டு எங்கேயாவது சென்று விடுகின்றனர். இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி நிரம்பி வழிந்து பல மணி நேரம் தண்ணீர் வீணாகிறது. மாதம் 3 முறை இவ்வாறு தண்ணீர் வீணாகிறது. திருச்செந்தூர் பேரூராட்சியின் கவனக் குறைவான நிர்வாகத்தால் தான் தண்ணீர் செழிப்பான காலத்திலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவ காரணம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thiruchendur , Tiruchendur, Tiruchendur panchayat, drinking water scarcity, supply
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...