×

ஓசூர் சானமாவு வனப்பகுதியில் மீண்டும் 40 யானைகள் முகாம் : விவசாயிகள், மக்கள் பீதி

ஓசூர்: ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதிக்கு நேற்று அதிகாலை மீண்டும் 40 யானைகள் வந்துள்ளன. ஏற்கனவே, ஒற்றை யானை அட்டகாசம் தாங்க முடியாத நிலையில் மீண்டும் யானைகள் வந்துள்ளது விவசாயிகளை பீதியடைய செய்துள்ளது. கிருஷ்ணகிரி  மாவட்டம் ஓசூரில் தென்பெண்ணை ஆறு பாயும் பகுதியில் அவரை, துவரை, கேரட்,  பீட்ரூட் போன்ற பலவகை காய்கறிகளும், தானிய வகைகளும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது ராகி பயிர் அறுவடை காலம். ராகி அறுவடையையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து ஓசூர் வனப்பகுதிக்கு  கூட்டம் கூட்டமாக 100க்கும் மேற்பட்ட யானைகள் வருவது வழக்கம்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு 40 யானைகள் ஓசூர்  வனப்பகுதிக்குள் புகுந்தன. இந்த யானைகளை வனத்துறையினர், விவசாயிகள்  தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு போராடி விரட்டினர். அந்த யானைகள்  மீண்டும் மாரசந்திரம், வட்டவடிவ பாறை, ஊடேதுர்க்கம், சினிகிரிபள்ளி வழியாக நேற்று அதிகாலை ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதிக்கு வந்தன. இதனால்  அறுவடைக்கு தயாராக உள்ள ராகி பயிர்களுக்கு யானைகள் சேதம் விளைவிக்கும் என  விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே உடனடியாக யானைகளை அடர்ந்த  வனப்பகுதியான தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டிட வேண்டும் என  விவசாயிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, நேற்று முன்தினம் இரவு ஆழியாளம் பகுதியில் விவசாய நிலத்திற்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி (35) என்பவரை ஒற்றை யானை தாக்கியது. இதில்,  படுகாயமடைந்த அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். பயிர்களை பார்வையிட சென்றவரை ஒற்றை யானை தாக்கியதால் விவசாயிகள்  அச்சத்தில் உள்ளனர். தற்போது ஒற்றை யானை, சானமாவு வனப்பகுதியில் இருந்து  போடூர் பகுதிக்கு வந்துள்ள தகவலால் இரவு நேரங்களில் யாரும் தனியாக செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : 40 Elephants Camp ,Hosur Sanat Forest: Farmers , Hosur, Chanamavu, Elephants
× RELATED ஓசூர் அருகே 40 யானைகள் முகாம்: மக்களுக்கு வனத்துறை அறிவுறுத்தல்..!