×

5 வது நாளாக தொடரும் துயரம்: உணவின்றி 1.50 லட்சம் மக்கள் பரிதவிப்பு...தீவானது 40 கிராமங்கள்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்

திருச்சி: கடந்த 16ம் தேதி கஜா புயல் கோரதாண்டவம் ஆடியதில் நாகை முதல் வேதாரண்யம் வரை பலத்த ேசதத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக வேதாரண்யம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் சின்னாபின்னமானது. வேதாரண்யம் பகுதியில் 123 முகாம்களில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வேதாரண்யம் பகுதியில் மட்டும் தென்னை, மா, வாழை, முந்திரி உள்பட சுமார் 1 கோடி மரங்கள் முறிந்தும், வேரோடும் சாய்ந்துள்ளன. சுமார் 50,000 வீடுகள் முற்றிலும் இடிந்துள்ளன. சாலைகளில் மரங்கள் விழுந்து கிடப்பதால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி மார்க்கத்தில் 5 நாட்களாகியும் இதுவரை போக்குவரத்து சீராகவில்லை.

இதன்காரணமாக கத்தரிப்புலம், நாககுடையான், திட்டக்காடு, தென்னடார், உப்பளச்சேரி, நாலுவேதபதி, புஷ்பவனம் உள்ளிட்ட 40 கிராமங்கள் தீவாக மாறி விட்டன. இந்த கிராமங்களில் வசித்துவரும் சுமார் 1.50 லட்சம் பேர் உணவு கிடைக்காமல் தவிக்கின்றனர். புயல் தாக்கி 5 நாட்களாகியும், அதிகாரிகள் யாரும் இந்த 40 கிராமங்களுக்கும் செல்லவில்லை. வீழ்ந்து கிடக்கும் தென்னை மரங்களில் உள்ள இளநீரையும் குடித்து பசி போக்கி வருகின்றனர். நாகை மார்க்கத்தில் மட்டும் சாலை சீரமைக்கப்பட்டுள்ள போதிலும் அங்கு பால், காய்கறி போன்றவற்றை வியாபாரிகள் கொண்டு செல்ல அச்சத்தில் உள்ளனர். நேற்று இந்த மார்க்கத்தில் ஆங்காங்கே மக்கள் மறியலில் ஈடுபட்டனர். கார், டூவீலர்களில் செல்பவர்களை மறித்து உணவு பொருள் இருக்கிறதா என மக்கள் கேட்கும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது.

வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் கூட்டம் அதிக அளவு உள்ளது. இங்கு பகலில் ஜெனரேட்டர் இயக்கப்படுவதில்லை. இரவில் மட்டும் இயக்குகிறார்கள். காய்ச்சல் பாதிப்பால் தினமும் 500க்கும் அதிகமானவர்கள் இங்கு வருகிறார்கள். இவர்களை கவனிக்க போதுமான மருத்துவர்கள் இல்லை. இதனால் மக்கள் பசி பட்டினியுடன், காய்ச்சலாலும் அவதிப்பட்டு வருகிறார்கள். வேதாரண்யம் அடுத்து தலைஞாயிறு பகுதியில் இருந்து 4 கிமீ தொலைவில் வண்டல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 425 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கஜா புயல் வண்டல் பகுதியையும் வாரி சுருட்டியுள்ளது. வண்டலில் போடப்பட்டிருந்த மின்கம்பங்கள் அனைத்தும் சேதமாகி உள்ளது. பொதுமக்கள் வளர்த்த ஆடு, மாடு, கோழிகள் அனைத்தும் இறந்து கிடப்பதால் அப்பகுதியே துர்நாற்றம் வீசுகிறது. குடிப்பதற்கும், சாப்பிடுவதற்கும் சாப்பாடு இல்லாமல் நாதியின்றி தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் கூறுகையில், புயல் தாக்கி 5 நாட்கள் ஆன நிலையிலும் இப்பகுதிக்கு யாரும் வரவில்லை. இங்குள்ள ரேஷன் கடையில் அரிசி மற்றும் மண்ணெண்ணெய் மட்டுமே வழங்கப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளில் மின்சாரம் இல்லாததால் எந்த ஒரு பணியும் செய்ய முடியாத நிலை உள்ளது. குறிப்பாக குடிநீர் வழங்க முடியவில்லை. மின்சாரம் இல்லாததால் பால் வாங்கி வீடு, கடைகளில் இருப்பு வைத்து விற்க முடியவில்லை. மேற்கண்ட பகுதிகளில் இன்னும் கடைகள் திறக்கப்படவில்லை. குறிப்பாக பெட்டிக்கடைகள், டீக்கடைகள் கூட இல்லை. லிட்டர் 35 ரூபாய்க்கு விற்கப்பட்ட பால் நேற்று ரூ.50 வரை விற்கப்பட்டது.

அதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஜெனரேட்டர் ஏற்பாடு செய்து 4 நாட்களுக்கு பிறகு நேற்று காலை வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டது. புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சிலர் ஜெனரேட்டர்களை கொண்டு வந்து அதன் மூலம் வீடுகளில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளை இயக்குகிறார்கள். இதற்கு 15 நிமிடத்திற்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கின்றனர். மக்கள் ஆங்காங்கே குடிநீர், உணவின்றி தவித்து வரும் நிலையில் கடையில் புகுந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் கடையை திறக்க வியாபாரிகள் மறுக்கின்றனர். அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் 2,000 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. இடிந்து கிடக்கும் வீடுகளை அந்த மக்கள் சீரமைக்கவும் முன்வரவில்லை. வீடுகளை சீரமைத்துவிட்டால் அல்லது இடிபாடுகளை அப்புறப்படுத்தி விட்டால் நமக்கு நிவாரணம் கிடைக்காது என்ற எண்ணத்தில் மக்கள் உள்ளனர்.

இந்த மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் தென்னை சாகுபடி அதிகம். இந்த பகுதிகளில் மட்டும் 37,868 ஹெக்டேரில் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தென்னை விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து செய்வதறியாது தவித்து வருகின்றனர். புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லும் சாலையில் உள்ள கிராமங்கள் மற்றும் ஆலங்குடி, வடகாடு, கந்தர்வகோட்டை பகுதிகள் கஜாவால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் அறந்தாங்கி பஸ் நிலையம், புதுக்கோட்டை நகரம் உள்பட ஒரு சில இடங்களுக்கு மட்டும் மின் விநியோகம் அளிக்கப்பட்டுள்ளது. வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், கீரமங்கலம், குளமங்கலம், கருக்காக்குறிச்சி, மழையூர், கந்தர்வக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 15 லட்சம் தென்னை மரங்கள், 10,000 ஏக்கர் பலா மரங்கள், 1000 ஏக்கர் மாமரங்கள் அடியோடு சாய்ந்து விட்டன. நெல், சோளம், கடலை போன்ற பயிர்கள் அழிந்தால் கூட மீண்டும் அந்த இடத்தில் உடனே சாகுபடி செய்து விடலாம்.

ஆனால் இந்த மரங்களை மீண்டும் வளர்த்தெடுக்க 5 முதல் 7 ஆண்டுகளாகும். குடும்பமே உழைத்து குழந்தைகளை வளர்ப்பது போல் வளர்தெடுத்த மரங்கள் கண் முன்னேயே வீழ்ந்து கிடப்பதை பார்க்க முடியாமல் விவசாயிகள் கதறிக்கொண்டிருக்கின்றனர். நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை சரபோஜி கல்லூரியில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மிரட்டும் மழை: வேதாரண்யம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய விட்டு விட்டு மழை பெய்தது. இன்று பகலிலும் மிதமான மழை பெய்தது. மழை வேகமாக பெய்தால், சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது. இது மக்களை மேலும் கவலையில் ஆழ்த்தி உள்ளது. இதுதவிர டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களிலும் இன்று லேசான மழை பொழிந்தது.

50 இடங்களில் மறியல்: திருத்துறைப்பூண்டி நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் முகாமில் தங்கி உள்ளவர்களுக்கு அரிசி மட்டும் வழங்கி குடிநீர் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்படவில்லை. அதிகாரிகளும் வந்து பார்வையிடவில்லை. இதைக்கண்டித்து சாலை மறியல் நடந்தது. அதேபோல் அதிகாரிகள் வராததை கண்டித்து ஆட்டூர், திருப்பத்தூர், வேளுர், கொக்கலாடி, பாமணி, அண்ணாநகர் ரயில்வேகேட், நெடும்பலம் ரயில்வேகேட், வேதை பைபாஸ் சாலை, தோப்படித்தெரு உள்பட 50 இடங்களில் நேற்று ஒரே நாளில் சாலை மறியல் நடந்தது. இன்று திருவாரூர் மாவட்டம் வலங்கைமான், திருச்சி மாவட்டம் மணப்பாறை உட்பட பல இடங்களில் போராட்டம் நடந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : villages ,island , Food, people, villages, officials
× RELATED குடிநீர், சாலை வசதி இல்லை எனக்கூறி தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்