×

சாலைகளில் வாகனத்தை நிறுத்துவதும் விபத்துக்கு வழிவகுக்கிறது: வெங்கடாச்சலம் சரவணன், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட மேலாளர்

சாலை விபத்தினால் உயிரிழப்பு ஏற்படுவது குறித்து நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த ஆய்வில் விபத்து நடைபெறும் பகுதி கண்டறியப்படுகிறது. பின்னர், அந்த பகுதி விபத்து பகுதியாக அறிவிக்கப்படுகிறது. பின்னர் அந்த பகுதிக்கு சென்று வல்லுனர்கள் குழுவினர் ஆய்வு செய்கின்றனர். அந்த குழுவினர் அந்த பகுதிகளில் விபத்து ஏற்படுவதை தவிர்க்க என்னென்ன பணிகள் செய்யலாம் என்று அறிவுரை வழங்குவார்கள். அதன்பேரில் அந்த இடத்தில்  சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மதுரை முதல் கன்னியாகுமரி பகுதிகளில் 7 இடங்கள் விபத்து பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் அறிவிப்பு பலகை, ஸ்பீட் பிரேக்கர், ஒளிரும் ஸ்டிக்கர்கள் வைப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. நான்கு வழிச்சாலைகளில் பெரும்பாலும் மக்களின் நலன் கருதி சாலையின் நடுவில் வாகனங்கள் திரும்ப செல்ல அனுமதிக்கப்படுகிறது.

அந்த இடங்களில் தான் அதிகமாக விபத்து நடக்கிறது. வல்லுனர்கள் அந்த இடங்களில் பாலம் கட்ட வேண்டுமென்று அறிவுரை வழங்கினால், அந்த சாலை சந்திப்புகளில் உயர் மட்ட பாலம் அல்லது சுரங்க பாலம் அமைக்கப்படுகிறது. ஒசூரில் இருந்து கிருஷ்ணகிரி வரைக்கும், கிருஷ்ணகிரியில் இருந்து வாலாஜா வரை 6 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. வாலாஜாவில் இருந்து பூந்தமல்லிக்கு 6 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. அந்த இடங்களில் சாலை சந்திப்புகளில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய சாலைகளில் தான் விபத்து என்று சொல்லி விட முடியாது. எல்லா சாலைகளிலும் தான் விபத்து நடக்கிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணைய சாலைகளில் அதிகளவில் வாகனங்கள் செல்கிறது. இதனால், நாங்கள் பாதுகாப்பான சாலையை தான் கொடுத்துள்ளோம். இருப்பினும் சில இடங்களில் கவனக்குறைவால் தான் விபத்து நடக்கிறது. சமீபத்தில் கூட உளுந்தூர் பேட்டை அருகே சாலைகளில் வாகனங்கள் நிறுத்தி வைத்ததால், 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது போன்று சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதால் கூட விபத்து நடக்கிறது. நாங்கள் இது போன்று வாகனங்களை நிறுத்த கூடாது என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

 விழிப்புணர்வு மூலமும், அரசு துறைகளின் தீவிர கண்காணிப்பு மூலமும் தான் விபத்தை தடுக்க முடியும். மக்கள் சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும், வேகமாக செல்வதை தவிர்க்க வேண்டும் என்றிருந்தாலேயே பாதி பிரச்சனை குறைந்து விடும். காவல்துறை சார்பிலும் வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் சார்பில் காவல்துறை, போக்குவரத்து துறையை அழைத்து அறிவுரை வழங்க வேண்டும். அவர்கள், கண்டிப்புடன் நடவடிக்கை எடுத்தால் விபத்தை தவிர்க்கலாம். விபத்து நடைபெறும் பகுதிகளில் சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் அறிக்கை தாக்கல் செய்தவுடன் மத்திய அரசு சார்பில் அதற்கான நிதி தரப்படுகிறது. எனவே, எங்களை பொறுத்தவரை நிதி பிரச்சனை என்பது இல்லை. விழிப்புணர்வு மூலம்தான் விபத்தை தடுக்க முடியும் மக்கள் சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும், வேகமாக செல்வதை தவிர்க்க வேண்டும். இதை செய்தாலே பாதி பிரச்சனை குறைந்து விடும்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Venkatachalam Saravanan ,roads ,accident ,National Highway Commission of India , vehicle, accident, Venkatachalam Saravanan, India National Highway Commission,
× RELATED விருதுநகர் குவாரி விபத்தில்...