×

சன்னிதானத்தில் நுழைய பெண்கள் அடுத்தடுத்து முயற்சி சபரிமலையில் திக்... திக்.... நிமிடங்கள்

உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்று, பக்தர்களால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இந்த சூழலில் சபரிமலை குறித்து செய்தி சேகரிப்பதற்காக பெண் நிருபர்கள் செல்ல முயன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து பெரும் புயலை கிளப்பி உள்ளன. இதில் முதலில் முயற்சி செய்தவர் சுகாசினி ராஜ் (38). டெல்லியை சேர்ந்த நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் மூத்த பெண் நிருபரான சுகாசினிராஜ் (38) தனது நண்பருடன் நேற்று முன்தினம் காலை சன்னிதானத்துக்கு செல்ல முயன்றார். அவருடன் போலீசாரும் பாதுகாப்பாக சென்றனர். ஆனால் மரக்கூட்டம் பகுதியில் வைத்து பக்தர்கள் திரண்டு அவரை முற்றுகையிட்டனர். தரிசனம் முடித்து வந்த பக்தர்களும், தரிசனத்துக்கு சென்று கொண்டிருந்த பக்தர்களும் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பக்தர்கள் ஆக்ரோஷத்துடன் அவர்களை முற்றுகையிட்டு சரணகோஷம் எழுப்பினர். மேலும் பெண் நிருபரை தாக்கவும் முயற்சி நடந்தது. இதையடுத்து நிருபர் சுகாசினிராஜ் பம்பைக்கு திரும்பினார். இது குறித்து அவர் பம்பை போலீசில் புகார் அளித்தார். போலீசார் பக்தர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் போலீசார் அவரை டெல்லிக்கு திரும்பி அனுப்பினர். அதன்பின் நேற்று மதியத்துக்கு பின்னால் சபரிமலை பகுதியில் அமைதி நிலவியது.
இதைத்தொடர்ந்து, அன்று இரவு தெலங்கானாவை சேர்ந்த தனியார் டிவி பெண் நிருபர் கவிதா தனது உதவியாளருடன் பம்பை காவல்நிலையம் வந்தார். செய்தி சேகரிக்க சன்னிதானம் செல்ல வேண்டும் என அவர் கூறினார். இரவு நேரம் என்பதால் உரிய பாதுகாப்பு அளிக்க முடியாது என்றும் காலையில் செல்லலாம் என்றும் போலீசார் கூறினர். இதையடுத்து இரவு அவர் காவல் நிலையத்தில் தங்கினார்.

நேற்று காலை 6.45 மணிக்கு ஐ.ஜி. ஜித் தலைமையில் 100க்கும் மேற்பட்ட ேபாலீசார் அவர்களை அழைத்து செல்ல தயாரானார்கள். அப்போது கொச்சியை சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் ரஹ்னா பாத்திமா என்ற பெண்ணும் இருமுடி கட்டுடன் வந்தார். தனக்கு தரிசனம் செய்ய சன்னிதானம் செல்ல வேண்டும். அதற்கு அனுமதிக்க வேண்டும் என கேட்டார். போலீசார் அவரையும் அனுப்பி வைக்க தீர்மானித்தனர். கவிதாவுக்கு போலீசார் அணியும் பாதுகாப்பு உடையும், ஹெல்மெட்டும் வழங்கப்பட்டது. சுமார் 100க்கும் மேற்பட்ட அதிரடிப்படை போலீசார் புடைசூழ அவர்கள் சன்னிதானத்துக்கு புறப்பட்டனர். சபரிமலையில் பெய்து வரும் பலத்த மழையையும் பொருட்படுத்தாமல் போலீசார் இருவரையும் பாதுகாப்பாக அழைத்து சென்றனர். நடைப்பந்தல் வரை பெரிய தடையேதும் இல்லாமல் சென்றனர். நடைப்பந்தல் அருகே திரண்ட பக்தர்கள் இவர்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். சரண கோஷம் எழுப்பிய அவர்கள் தரையில் படுத்தும் போராட்டம் நடத்தினர். இதனால் 2 பெண்களும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டனர். போராட்டம் நடத்தியவர்களுடன் ஐஜி ஜித் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பக்தர்கள் அமைதியாகவில்லை. சன்னிதானத்தில் பதற்றம் அதிகரித்ததால் அதிரடிப்படை போலீசாரும், கமாண்டோ வீரர்களும் குவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே இளம் பெண்கள் சன்னிதானத்துக்கு வந்தால் நடையை அடைக்குமாறு பந்தளம் அரண்மனையில் இருந்து தகவல் வந்துள்ளது. அவ்வாறு பெண்கள் வந்தால் நடையை அடைத்து சாவியை கோயில் நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைத்து விடுவேன். இதை தவிர வேறு வழியில்லை. என்னால் வேறு எதுவும் செய்ய முடியாது. என்று தந்திரி கண்டரர் ராஜீவரர் கூறினார். இந்த தகவல் சன்னிதானத்தில் பரபரப்பை மேலும் அதிகப்படுத்தியது.
கோயில் மேல்சாந்திகளின் உதவியாளர்கள் 18ம் படிக்கு அருகே தரையில் அமர்ந்து போராட்டத்தை தொடங்கினர். வழக்கமாக மேல்சாந்திகள் இல்லாத நேரத்தில் இவர்கள் தான் சபரிமலையில் பூஜைகள் நடத்துவார்கள். இந்நிலையில் அவர்கள் தீவிர போராட்டத்ைத தொடங்கினர். நேரம் செல்ல செல்ல அவர்களுடன் தேவசம்ேபார்டு ஊழியர்களும், பக்தர்களும் இணைந்தனர். சபரிமலை வரலாற்றில் மேல்சாந்திகளின் உதவியாளர்கள் போராட்டம் நடத்துவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கதது. இந்த போராட்டத்தால் சபரிமலையில் மேலும் போராட்டம் அதிகரித்தது. இதையடுத்து கவிதா மற்றும் ரஹ்னாபாத்திமா ஆகியோரை ஐஜி ஜித் தனியாக அழைத்து பேச்சுவார்த்ைத நடத்தினார். அப்போது திரும்பி செல்லுமாறு இருவரையும் கேட்டுக் கொண்டார். ஐஜியின் கோரிக்கையை இரு பெண்களும் ஏற்க மறுத்தனர். இருப்பினும் போலீசார் நீண்ட நேரம் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து இரு பெண்களும் திரும்பி செல்ல முடிவு செய்தனர். அவர்கள் பலத்த பாதுகாப்புடன் பம்பைக்கு திரும்பினர்.

இதே போல் மேரி ஸ்வீட்டி என்ற பெண்ணும் நேற்று காலை சுமார் 11.30 மணியளவில் பம்பை வந்தார். அவர் சன்னிதானம் செல்லப்போவதாக கூறினார். தகவல் அறிந்து அங்கு பக்தர்கள் திரண்டனர். போலீசார் வந்து விசாரித்தபோது கடந்த 6 வருடத்துக்கு முன்பே பம்பை வந்ததாகவும், இப்போது விஜயதசமி நாளில் ஐயப்பனை காண வந்ததாகவும் கூறினார். இதற்கு அங்கிருந்த பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதையடுத்து தங்களால் பாதுகாப்பு அளிக்க முடியாது என்று போலீசார் கூறினர். பக்தர்களின் எதிர்ப்பை கண்டு பயந்த அவர் சன்னிதானம் செல்ல விரும்பவில்லை என கூறி திரும்பி சென்றார்.
இந்த பரபரப்பிற்கு இடையே மேலும் 2 இளம் பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்றனர். இது குறித்து போலீசாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் சபரிமலை அருகே இலவுங்கல் பகுதியில் போலீசார் தடுத்தனர். அங்குள்ள காவல் நிலையத்தில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையில் இவர்களுக்கு சபரிமலை செல்ல போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். ஆனால் இருவரும் திரும்பிசெல்ல மறுத்துவருகின்றனர். தொடர்ந்து அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த முடியாத நிலையில் இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் பெரும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. சபரிமலையில் எந்நேரமும் பதற்றமான சூழல் நிலவுவதால் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

உண்மையான பக்தர்கள் அல்ல


கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில், ‘‘சபரிமலைக்கு பக்தியுடன் வரும் யாராக இருந்தாலும் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். ஆனால் கடந்த சில தினங்களாக சவால் விட்டுக்கொண்டு சில பெண் இயக்கவாதிகள் தான் வருகின்றனர். போலீஸ் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து சன்னிதானத்துக்கு அழைத்து சென்றது தவறு. பேஸ்புக், வாட்ஸ்அப் என சமூக வலைதளங்களில் சவால் விட்டுக்கொண்டு யாரும் சபரிமலைக்கு வர முயற்சிக்க கூடாது. சபரிமலையை கலவர பூமியாக்க நாங்கள் விரும்பவில்லை’’ என கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Women ,Sabarimala , Women try, succeed , Sabarimala
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...