×

பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு வலுத்துவரும் நிலையில் சபரிமலையில் நாளை நடை திறப்பு

* உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பேரணி * மன்னர் குடும்பத்துடன் தேவசம் போர்டு இன்று ஆலோசனை

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு நிலவி வரும் நிலையில், ஐப்பசி மாத பூஜைகளுக்காக கோயில் நடை நாளை மாலை திறக்கப்படுவதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. திருவனந்தபுரத்தில் தலைமைச் செயலகம் நோக்கி பேரணி உள்ளிட்ட போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பிரச்னையின் தீவிரத்தை குறைக்க தந்திரி, பந்தளம் மன்னர் குடும்பத்துடன் இன்று  திருவிதாங்கூர் தேவசம்போர்டு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பாக, கேரளாவில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. நிலைக்கல், பம்பையில் போராட்டம் நடத்தப்படும் என்றும், எதிர்ப்பை மீறி சபரிமலை வரும் பெண்கள் தடுத்து திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் பல்வேறு இந்து அமைப்பினர் எச்சரித்துள்ளனர்.

மேலும் கேரளா முழுவதும் பேரணி, ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர பாஜ, காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சியினரும், பெண்கள் அமைப்பினரும் போராட்டங்களில் பங்கேற்று வருகின்றனர். பாஜ கூட்டணி கட்சிகள் சார்பில் பந்தளத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு கடந்த 10ம் தேதி நெடுந்தொலைவு பேரணி புறப்பட்டது. பாஜ கேரள மாநில தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை தலைமையில் தொடங்கிய இந்த பேரணி அடூர், கொல்லம் வழியாக நேற்று முன்தினம் மாலை திருவனந்தபுரத்தை அடைந்தது. நேற்று காலை திருவனந்தபுரம் கேசவதாசபுரத்தில் இருந்து தலைமை செயலகம் நோக்கி பேரணி புறப்பட்டது. நடிகர் சுரேஷ்கோபி, பாஜ மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்கள், ஆயிரக்கணக்கான பெண்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஊர்வலம் தலைமை ெசயலகத்தை அடைந்தது.

போராட்டங்கள் ஒருபுறம் தீவிரமடைந்துள்ள நிலையில், மறுபுறம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து சபரிமலைக்கு கட்டாயம் செல்வோம் என பெண்கள் சிலர் குரல் கொடுத்து வருகின்றனர். கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கண்ணபுரத்தை சேர்ந்த நிஷாந்த் என்பவரின் மனைவி ரேஷ்மா நிஷாந்த் (28) என்ற இளம்பெண் கார்த்திகை 1ம் தேதி சபரிமலைக்கு செல்ல இருப்பதாக அறிவித்துள்ளார். அவருடன் 4 பெண்கள் செல்ல இருப்பதாகவும், தொடர்ந்து அவர்கள் மாலை அணிந்து விரதத்தை கடைபிடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில், ஐப்பசி மாத பூஜைகளுக்காக நாளை மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. 18ம் தேதி முதல் 22ம் தேதிவரை தினமும் கணபதி ஹோமம், உஷ பூஜை உட்பட வழக்கமான பூஜைகளுடன் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை போன்ற சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. 5 நாட்களிலும் அதிகாலை 5.30 மணி முதல் காலை 10 மணிவரை நெய்யபிஷேகம் நடக்கும். 18ம் தேதி சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் கோயில்களுக்கான புதிய மேலசாந்தி தேர்வு நடக்கிறது. 22ம் தேதி இரவு ஐப்பசி மாத பூஜைகள் முடிந்து கோயில் நடை அடைக்கப்படுகிறது.

சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கமாட்டாேம் என்று இந்து அமைப்புகள் கூறியுள்ளதால் நிலைக்கல் மற்றும் பம்பையில் வழக்கத்தை விட கூடுதல் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதற்கிடையே, போராட்டத்தின் தீவிரத்தை குறைக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தந்திரி குடும்பம் மற்றும் பந்தளம் மன்னர் குடும்பத்தினருடன் இன்று தேவசம்போர்டு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பேச்சுவார்த்தை நடத்த கேரள அரசின் அழைப்பை மன்னர் குடும்பத்தினர் நிராகரித்தது. மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய இருப்பதாக மன்னர் குடும்பத்தினர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

‘பாதுகாப்பு தர வேண்டும்’
கார்த்திகை 1ம் தேதி சபரிமலை செல்ல விரதம் இருந்து வரும் ரேஷ்மா நிஷாந்த் சபரிமலை செல்வதாக முதலில் பேஸ்புக்கில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த தகவல் சிறிது நேரத்தில் கேரளா முழுவதும் பரவியது. இதையடுத்து அவருக்கு பேஸ்புக்கிலும், ேபானிலும் மிரட்டல் வர தொடங்கின. நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு கும்பல் ரேஷ்மா வீட்டிற்குள் புகுந்து மிரட்டியது. சபரிமலை சென்றால் உயிருடன் திரும்ப முடியாது. மலைக்கு செல்ல விடமாட்டோம் என்று கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், ‘‘போலீஸ் எனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். என்னுடன் வர உள்ள மேலும் 4 பேருக்கும் மிரட்டல் வர வாய்ப்புள்ளது. எனவே அவர்களது பெயரை வெளியிட விரும்பவில்லை’’ என்று ரேஷ்மா நிஷாந்த் கூறியுள்ளார்.

பிரச்னை வெடித்ததற்கு முதல்வரே காரணம்
தலைமைச் செயலகம் நோக்கிய பேரணியில் பங்கேற்ற பாஜ தேசிய பொதுச்செலயாளர் முரளீதர் ராவ் பேசியதாவது: தற்போது அரசியல் அமைப்பு சட்டத்திற்கோ மக்களுக்கோ எதிராக இந்த போராட்டத்தை பாஜ நடத்தவில்லை. அரசியல் அமைப்பு சட்டம் அளிக்கும் உரிமையை பெறுவதற்காகவே மக்கள் போராடுகின்றனர். இந்த விவகாரத்தில சீராய்வு மனு தாக்கல் செய்யவேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். ஆனால் அதை கேரள அரசு அலட்சியப்படுத்துகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிப்பதாக மார்க்சிஸ்ட் கட்சி கூறுகிறது. ஆனால் அவர்கள் கட்சிக்கு எதிராக தீர்ப்புகள் வந்தபோதெல்லாம் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். போராட்டங்களும் நடத்தியுள்ளனர்.சபரிமலை விவகாரத்தில் கேரளா, தமிழகம் உட்பட இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா உட்பட பல நாடுகளில் மக்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். சபரிமலை விவகாரம் இந்த அளவிற்கு மோசமானதற்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி தான் காரணம். இந்த பிரச்னையில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்ப்பு மேலும் வலுவடையும். இவ்வாறு அவர் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : morning walk ,Sabarimala ,women , Woman, resistance, Sabarimala, walk of walk
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு