×

கூட்டுறவு அதிகாரியை எரித்துக்கொன்ற மகன்: சொத்து தகராறில் கரூரில் பயங்கரம்

கரூர்: கரூரில் சொத்து தகராறில் ஓய்வு பெற்ற கூட்டுறவு அதிகாரியை எரித்துக்கொன்ற மகனை போலீசார் தேடி வருகின்றனர்.கரூர் மாவட்டம் வாங்கல் என்.புதூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் கந்தசாமி(67). ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க செயலாளர். இவரது மகன் தங்கவேல்(40). குடிப்பழக்கம் உள்ள  இவர் வேலை இல்லாமல் இருந்து வந்தார். குடிபோதைக்கு அடிமையான இவர் சமீபத்தில் பெங்களூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 4 மாதம் அங்கு சிகிச்சை பெற்று  திரும்பியிருந்தார். ஆனால் திரும்பவும் குடிக்க ஆரம்பித்திருந்தார்.இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில் சொத்தை பிரித்து கொடுக்க சொல்லி தந்தை கந்தசாமியிடம், தங்கவேல் தகராறு செய்துள்ளார். ஆனால்  கந்தசாமி மறுத்துள்ளார்.

 இதையடுத்து சிறிது நேரத்தில் தனது மொபட்டில் வெளியே கிளம்பி சென்ற தங்கவேல், ஒரு பாட்டில் பெட்ரோலுடன் வீட்டிற்கு வந்தார். பின்னர்  வீட்டிற்குள் சென்று தனது தாய் மங்கையர்கரசி, மனைவி தீபா(36), மகள் சிவரஞ்சனி(16) ஆகிய 3 பேரையும் ஒரு அறையில் தள்ளி பூட்டினார்.பின்னர் ஹாலில் கட்டிலில் படுத்திருந்த தனது தந்தை கந்தசாமியின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தனது மொபட்டில் தப்பி ஓடிவிட்டார்.  தீயினால் படுகாயமடைந்த கந்தசாமியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். கந்தசாமியை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு   சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் நேற்றிரவு 1 மணியளவில் கந்தசாமி பரிதாபமாக இறந்தார். வாங்கல் போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய  தங்கவேலை தேடி வருகின்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Burning,Co-operativ,Officer,Terror, Karur
× RELATED திருப்பத்தூரில் உள்ள நகராட்சி பூங்கா...