×

உரிமையாளர் சந்தித்து ஆறுதல் கூறாததால் ஓட்டல் முன்பு சடலத்தை வைத்து உறவினர்கள் ஒப்பாரி போராட்டம்

ராயபுரம்: பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் (50). இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஈஸ்வரன், மனைவி மற்றும் பிள்ளைகளை ஊரில் விட்டு, சென்னை ராயபுரம் சிமிட்ரி சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் சர்வராக வேலை பார்த்து வந்தார்.இந்நிலையில், கடந்த 15ம் தேதி ஈஸ்வரன், குளியலறை சென்றபோது, வழுக்கி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு மயங்கினார். இதை பார்த்ததும், உடன் வேலை செய்யும் சக ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மனைவி மற்றும் உறவினர்கள் சென்னை வந்தனர். ஆனால், நேற்று காலை ஈஸ்வரன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதையடுத்து நேற்று மாலை உறவினர்கள், சடலம் பிரேத பரிசோதனை முடிந்து, பெரம்பலூர் கொண்டு செல்வதற்காக ஆம்புலன்சில் புறப்பட்டனர். அப்போது, ராயபுரத்தில் அவர் வேலை செய்த ஓட்டலுக்கு சென்றனர். அங்கு ஓட்டல் நுழைவாயிலில் சடலத்தை வைத்து ஒப்பாரி வைத்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்து ராயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது, ஓட்டலில் வழுக்கி விழுந்த ஈஸ்வரன், 6 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனால், ஓட்டல் உரிமையாளர் வந்து பார்க்கவில்லை. தனது ஊழியருக்கு என்ன ஆனது என்றும் விசாரிக்கவில்லை, என கூறினர். பின்னர் போலீசார், இருதரப்பினரிடம் சமரசம் பேசி, சடலத்தை அங்கிருந்து கொண்டு செல்ல வைத்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Skylark fight, hotel, body
× RELATED இணை நோயுடன் கொரோனா தொற்றுக்கு...