அருப்புக்கோட்டை : விருதுநகர் அருப்புக்கோட்டை மானாமதுரை மீட்டர்கேஜ் பாதையாக இருந்து அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. 2013 முதல் இந்த வழித்தடத்தில் விருதுநகரிலிருந்து காரைக்குடிக்கு டெமு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் விருதுநகர்- அருப்புக்கோட்டையிலிருந்து மானாமதுரை பரமக்குடி சிவகங்கை, காரைக்குடி, பகுதிகளில் பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருந்தது, காலை 6 மணிக்கு விருதுநகரிலிருந்து புறப்பட்டு இயக்கப்பட்டு வந்தது.
இந்த ரயில் மானாமதுரையில் சுமார் 45 நிமிடங்கள் நின்று செல்லும் விதமாக இருந்ததால் பயணிகள் ரயில் புறப்படும் நேரத்தை மாற்றியமைக்க ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து விருதுநகரிலிருந்து 6.20மணியளவில் புறப்பட்டு வந்தது. மானாமதுரையில் காத்திருக்கும் நேரம் குறைந்தது. அதன் பின்பு 2ம் முறையாக புறப்படும் நேரம் மாற்றி விருதுநகரிலிருந்து 6.40மணிக்கு புறப்பட்டது.
இந்த ரயில் காலை 7.05மணிக்கு அருப்புக்கோட்டைக்கு வந்தது. இதனால் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுப்புற பயணிகளுக்கு வசதியாக இருந்தது. மானாமதுரையில் அதிகநேரம் காத்திருப்பு நிலை குறைந்தது. இந்நிலையில் ஆக.15ம் தேதி புதிய ரயில்வே கால அட்டவணை அறிவிக்கப்பட்டது. அதில் மீண்டும் காலை 6.10க்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டு இயக்கப்படுகிறது. மேலும் இந்த ரயில் பழைய கதையாக மானாமதுரையில் 45 நிமிடத்திற்கு மேல் நின்று செல்கிறது.
இந்த ரயிலில் பயணம் செய்யும் ரயில் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனால் மீண்டும் காலை 6.40 மணிக்கு விருதுநகரிலிருந்து புறப்படுமாறு ரயில்வே கால அட்டவணையை மாற்றியமைக்க வேண்டும் என அரசு அலுவலர்கள், மாணவர்கள் மதுரை கோட்ட ரயில்வே மேலாளருக்கும், தென்னக ரயில்வே மேலாளருக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். எனவே ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
