×

கொருக்குப்பேட்டை நேரு நகரில் கிடப்பில் மேம்பால கட்டுமான பணி: போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி

பெரம்பூர்: சென்னை மாநகராட்சி 4வது மண்டலத்திற்கு உட்பட்ட கொருக்குப்பேட்டை, நேரு நகர் பகுதியில், மேம்பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்னை மாநகராட்சி 4வது மண்டலத்தில் அடங்கிய கொருக்குப்பேட்டை, நேருநகர் பகுதியில் ரயில்வே கேட் உள்ளது. இந்த வழியாக வியாசர்பாடியில் உள்ள கூட் ஷெட்டுக்கு தண்டவாளம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் காலை மற்றும் மாலை வேளைகளில் கேட் மூடப்படுவதால் தினமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் கடுமையான அவதிக்குள்ளாகின்றனர்.

இந்த ரயில்வே கேட் அருகில் தனியார் மற்றும் மாநகராட்சி பள்ளிகள் உள்ளன. காலை மற்றும் மாலையில் மாணவர்கள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்வோர் ரயில்வே கேட் மூடப்படுவதால் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் ஏதேனும் விபத்து ஏற்பட்டு ஆம்புலன்ஸ் வந்தாலும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி காலதாமதம் ஆகிறது.இதனால், இந்த பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். அதன்படி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அதிமுக அரசு மேம்பாலம் கட்ட மண் பரிசோதனையை மட்டும் செய்தது.

பின்னர், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘ஒவ்வொரு முறையும் தேர்தல் நேரத்தில் மேம்பாலம் கட்டுவதாக உறுதி அளித்துவிட்டு செல்கின்றனர். ஆனால், அதன் பின்னர் மறந்து விடுகின்றனர். இப்பகுதி முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதி. தற்போது, டிடிவி தினகரன் தொகுதி எம்எல்ஏவாக இருப்பதால் அந்த திட்டத்தை மீண்டும் கையிலெடுக்க தயக்கம் காட்டுகின்றனர். வார்த்தைக்கு வார்த்தை ஜெயலலிதாவின் பெயரை சொல்லி காலத்தை கழிக்கும் அதிமுக அரசு ஜெயலலிதாவின் தொகுதியில் அக்கறை காட்ட வேண்டும்’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Structural construction,People,suffering,traffic,congestion
× RELATED மதுராந்தகம் அருகே வெள்ளப்புத்தூர்...