×

காவிரி நீரில் மாசு கலப்பு 2 வாரத்தில் விளக்க மனு தாக்கல் செய்ய தமிழகத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடெல்லி: காவிரி நீரில் மாசு கலப்பது தொடர்பான வழக்கில், கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவிற்கு அடுத்த 2 வாரத்தில் விளக்க மனு தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரியில் இருந்து தமிழகத்திற்கு வரும் நீரில் அதிகப்படியான கழிவுகள் கலந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் இருக்கும் விளை நிலங்கள் பாதிப்படைந்து பயிர் செய்வதற்கு ஏற்றவாறு இல்லாமல் வீணாகிறது என்றும், அதனால் பயிர் நஷ்டஈடாக கர்நாடகா மாநிலத்திடமிருந்து ரூ.2 ஆயிரத்து 480 கோடியை பெற்று தர வேண்டும் என தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வரும் உச்ச நீதிமன்றம் இரு மாநில சூழலியல் நிபுணர்கள் அடங்கிய குழு அறிக்கை தாக்கல் செய்ய கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்திற்கு வரும் காவிரி நீரில் கர்நாடகாவில் இருந்து மாசு கலந்து வருவது உண்மைதான் என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமும் இரண்டு முறை அதன் அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை தொடர்பாக தமிழக அரசும் பதில் மனுத்தாக்கல் செய்தது.

அதில், “காவிரியில் மாசு கலப்பதை கண்டறிய மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமையின் மூலம் 7 பேர் கொண்ட குழுவை உருவாக்கி செயல்படுத்த வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது. குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து கடந்த வெள்ளிக்கிழமை கர்நாடகாவும் பதில் மனு தாக்கல் செய்தது.
இந்த நிலையில் வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே மற்றும் நாகேஸ்வரராவ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவிரி நீர் மாசு தொடர்பாக கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவிற்கு தமிழக அரசு 2 வார காலத்துக்குள் விளக்க மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Cauvery Water, Pollution Mixed, Tamil Nadu, Supreme Court
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...