×

11 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கும் நிலையில் கேரளாவுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை: 1.5 லட்சம் பேர் முகாமில் தஞ்சம்

திருவனந்தபுரம்: கேரள  மாநிலத்தில் வரலாறு காணாத கனமழையால் 11 மாவட்டங்களில் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. வயநாட்டில்  நேற்று அதிகாலை மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கேரளாவில் மேலும் 4 நாள்  மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.கேரளாவில்  கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால்  வரலாறு காணாத அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு மற்றும்  வெள்ளத்தில் மூழ்கி 3 நாட்களில் மட்டும் 39 பேர்  இறந்துள்ளனர். 6 பேர்  காணாமல் போயுள்ளனர். கனமழையை தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிவாரண  முகாம்கள் திறக்கப்பட்டு ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்க  வைக்கப்பட்டுள்ளனர். இடுக்கி, வயநாடு  மாவட்டங்களில் தான் மழையால்  கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட  இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் குறிச்சியார்மலை  பகுதியில் கடந்த சில தினங்களுக்கு  முன்பு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில்  கால்நடைகள் பலியாயின. அந்த பகுதியில் வசித்து வந்த 20க்கும் மேற்பட்ட  குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதால் உயிர்  இழப்பு தவிர்க்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை சுமார் 1  மணியளவில் வயநாடு அருகே குறிச்சியார்மலையில் மீண்டும் நிலச்சரிவு  ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள சுமார் 25 ஏக்கர் விவசாய நிலம்  அழிந்தது. 10க்கும் மேற்பட்டவீடுகள் இடிந்தன. இதுபோல் தவிஞ்சியால் மலையிலும் நிலச்சரிவு  ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஆதிவாசி சமூகத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் உள்ளனர்.  இவர்களும் அருகில் உள்ள நிவாரண முகாம்களுக்கு  மாற்றப்பட்டுள்ளனர். இந்த  பகுதியில் ஆதிவாசிகள் வசித்து வந்த 10 வீடுகள் சேதமடைந்துள்ளன. மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.இந்த நிலையில் வயநாடு, இடுக்கி மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்துவருகிறது. வயநாட்டில்  வைத்திரி, மானந்தவாடி பகுதிகளில் விடிய விடிய கன மழை  கொட்டியது. தொடர்ந்து  மழை பெய்து வருவதால் பாணசுரர்  சாகர் அணை,  இடமலையார் அணைகளில் தண்ணீர்  திறக்கப்படுவது அதிகரிக்கப்பட்டுள்ளது.  இடமலையார் அணையின் 4 மதகுகளும்  திறக்கப்பட்டுள்ளன. இதனால் பெரியாற்றில்  நீர் வரத்து மேலும் அதிகரிக்கும்  அபாயம்  ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே  வயநாடு, இடுக்கி மாவட்டங்கள் உட்பட கேரளாவில் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை  ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த பகுதியில் 12 முதல் 20 செ.மீ. வரை மழை  ெபய்யும் என்றும், கேரளா,  கர்நாடகா, லட்சத்தீவு கடலோர பகுதிகளில் மணிக்கு  35 முதல் 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், சிலநேரங்களில் 60  கி.மீ. வரை காற்றின் வேகம் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம்  எச்சரித்துள்ளது.  எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. இடுக்கியில் மழையின் தீவிரம் தணிய தொடங்கிய  நிலையில் இடுக்கி அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளது. நேற்று மாலை 5 மணி  நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 2397.12 அடியாக இருந்தது. தொடர்ந்து 4வது  நாளாக  நேற்றும் 5 மதகுகள் வழியாகவும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.வயநாடு  மாவட்டத்தில் நேற்றும் பள்ளி கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி  நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இடுக்கி அணை மட்டுமல்லாமல்  கேரளா முழுவதும் 24 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளன.  கடந்த 5 நாட்களுக்கு  மேலாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

வரலாறு காணாத பேரழிவு முதல்வர் பினராய் பேட்டி
கேரள முதல்வர் பினராய் விஜயன் கூறியதாவது: கேரளா வரலாறு காணாத  பேரழிவை சந்தித்துள்ளது. இரண்டரை மாதங்களாக பெய்து வரும் கனமழை கடும் அழிவை  ஏற்படுத்தியுள்ளது. 186 பேர் பலியாகி உள்ளனர். ஆகஸ்ட்  9 முதல் 12 வரை 4  நாட்களில் மட்டும் 37 பேர் மரணமடைந்துள்ளனர். 5 பேரை காணவில்லை.211  இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 27 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளன. 10  ஆயிரம் கிமீ அதிகமான பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் உள்ள சாலைகள்  சேதமடைந்துள்ளன. மழை, நிலச்சரிவால் பல ஆயிரம் ஏக்கர்  விவசாய நிலம்  சேதமடைந்துள்ளது. கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது. தென்மேற்கு பருவமழை  காலத்தில் மட்டும் 2 முறை கேரளா அழிவை சந்தித்துள்ளது. ஏற்கனவே  இதுதொடர்பாக மத்திய ஆய்வு குழுவினர்  பார்வையிட்டு சென்றுள்ளனர். மீண்டும்  சேத பகுதிகளை பார்வையிட மத்திய குழுவை அனுப்ப வேண்டும். இவ்வாறு  கூறியுள்ளார்.

₹100 கோடி போதாது
கேரள அரசு வருத்தம்
கேரளாவில் கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் மதிப்பு மொத்தம் ரூ.8,316 கோடி என்று அம்மாநில அரசு கணக்கிட்டுள்ளது. மேலும், மீட்பு பணிகளுக்காக ரூ.1,220 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று  கேரள அரசு கோரியிருந்தது. இந்நிலையில், கேரளாவுக்கு மத்திய அரசு ரூ.100 கோடி ஒதுக்கி உள்ளது. இதுபற்றி கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் கூறுகையில், ‘‘கேரளாவில் வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில்,  வெறும் ரூ.100 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. இது எந்த வகையிலும் போதாது’’ என்று கூறியுள்ளார்.

ஆனால், இதுகுறித்து மத்திய அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் கூறுகையில், ‘‘ஐசக் எல்லாவற்றிலும் குறை கூறுவதையே வழக்கமாக கொண்டவர். சிக்கலான நேரத்தில் மத்திய அரசு உடனடியாக ரூ.100 கோடியை தந்துள்ளது.  மேலும், இயற்கை பேரிடர் நேரங்களில் நிதி ஒதுக்குவதுதொடர்பான விதிமுறைகள் உள்ளன. அதன் அடிப்படையில்தான் மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது’’ என்றார்.

கனமழையால் திருச்சூர் ஆதிரப்பள்ளி அருவியில் இருந்து செல்லும் ஆற்றிலும் கடும் வெள்ள ெபருக்கு ஏற்பட்டுள்ளது. ஆதிரப்பள்ளியில் இருந்து வரும் தண்ணீர் பெரிக்கல்குந்து அணைக்கு வருகிறது. இந்த அணையும்  திறக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள சார்ப்பா வனப்பகுதியில் ஒரு காட்டு யானை நடு ஆற்றில் பாறைகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டது. பாறைகளுக்கு இரு புறமும் வெள்ளம் கரை புரண்டு ஓடியதால்  யானை அங்கேயே சிக்கி தவித்தது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. வனத்துறையினர் விரைந்து வந்தனர். ஆனால் ஆற்றில் தண்ணீர் குறைந்தால் மட்டுமே யானையை காப்பாற்ற முடியம் என்ற நிலை ஏற்பட்டது.  பெரிக்கல் குந்து அணையை மூடினால் மட்டுமே ஆற்றில் தண்ணீர் குறையும். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் திருச்சூர் அணை பாதுகாப்பு அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினர். இதையடுத்து பெரிக்கல் குந்து அணை  மூடப்பட்டது. இதையடுத்து ஆற்றில் நீர் வரத்து குறைந்தது. தண்ணீர் குறைந்ததால் யானை ஆற்றை கடந்து வனத்திற்குள் சென்றது. இதன் பிறகு மீண்டும் அணை திறக்கப்பட்டது.

இடுக்கி  மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு  ஏற்பட்டது. இப்பகுதியில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாகின. அடிமாலியில்  உள்ள பொட்டன்குளம்பாடி பகுதியில் ஏற்பட்ட  நிலச்சரிவில் லட்சுமி  குட்டியம்மா(85) என்பவரது வீடும் சேதமடைந்தது. இவர் இடிந்த வீட்டில்  உடல்நிலை சரியில்லாமல் தனியாக தவித்து வந்துள்ளார். இந்த விவரம் யாருக்கும்  தெரியவில்லை. இதுபற்றி ராணுவத்தினருக்கு  தகவல் கிடைத்தது.இதையடுத்து  19 மெட்ராஸ் பிரிவை சேர்ந்த மேஜர் தீபக்சிங் தகூரி தலைமையிலான ராணுவ  வீரர்கள் விரைந்து சென்று லட்சுமி குட்டியம்மாவை மீட்டனர். பின்னர் அவரை  அடிமாலியில் உள்ள அரசு மருத்துவமனையில்  அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ராணுவத்தினர் தெரிவித்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : floods, Hailing, Kerala, camp
× RELATED காரில் ரூ.11 லட்சம் சிக்கிய விவகாரம்:...