×

சுங்கச்சாவடிகளை அகற்ற கோரி நாடு முழுவதும் இன்று முதல் லாரி ஸ்டிரைக் : தமிழகத்தில் 4.50 லட்சம் லாரிகள் பங்கேற்பு

* அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும்

சேலம் : நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் காலவரையற்ற லாரி ஸ்டிரைக் இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் மட்டும் 4.50 லட்சம் லாரிகள் ஓடாது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றி விட்டு, ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணமாக ரூ18 ஆயிரம் கோடியை பெற்றுக்கொள்ள வேண்டும். பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை 3 மாதத்துக்கு ஒருமுறை நிர்ணயிப்பதோடு, ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும். லாரி உள்ளிட்ட மோட்டார் வாகனங்களுக்கான 3ம் நபர் காப்பீட்டு கட்டண உயர்வை ரத்து செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (20ம் தேதி) முதல் காலவரையற்ற லாரி ஸ்டிரைக்கில் ஈடுபடுவதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இந்த ஸ்டிரைக்கில் நாடு முழுவதும் 65 லட்சம் லாரிகள் பங்கேற்கின்றன. தமிழகத்தில் 4.50 லட்சம் லாரிகள் ஸ்டிரைக்கில் பங்கேற்கும் என தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்திருக்கிறது. சென்னையில் மணலி, மாதவரம், மஞ்சம்பாக்கம், சாத்தாங்காடு ஆகிய பகுதிகளில் உள்ள லாரி நிறுத்த மையங்களில், நூற்றுக்கணக்கான லாரிகள் நேற்று முதலே நிறுத்தப்பட்டன. அந்த லாரிகளில் வேலை நிறுத்தம் தொடர்பான துண்டு பிரசுரங்களை டிரைவர்கள் ஒட்டினர். கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் காய்கறிகள், செங்குன்றம் பகுதிக்கு அரிசி மூட்டைகள் வருவது பாதிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் லாரி ஸ்டிரைக்கின் காரணமாக நேற்றைய தினமே செவ்வாய்பேட்டையில் உள்ள லாரி மார்க்கெட்டில் ஏராளமான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அந்த லாரிகளில் ஸ்டிரைக் அறிவிப்பு நோட்டீசுகள் ஒட்டப்பட்டிருந்தன. இதேபோல், நாமக்கல், கோவை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் லாரிகள், ஆங்காங்கே ஷெட்டுகளில் நிறுத்தப்பட்டுள்ளது.

லாரி ஸ்டிரைக்கிற்கு தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜென்டுகள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்து, கடந்த 15ம் தேதி முதல் வட மாநிலங்களுக்கான சரக்கு புக்கிங்கையும், நேற்று முன்தினம் (18ம் தேதி) முதல் மாநிலத்திற்குள்ளான சரக்கு புக்கிங்கையும் நிறுத்திவிட்டனர்.இன்று தொடங்கும் லாரி ஸ்டிரைக்கால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. காரணம், ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் பருப்பு வகைகள், மளிகை பொருட்கள், காய்கறிகளின் வரத்து முற்றிலும் நின்றுபோகும். இவை நிற்கும் பட்சத்தில், அதன் விலை பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் நடக்கும் ஸ்டிரைக்கில் மினி லாரிகளும் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்துவித சரக்கு போக்குவரத்தும் முற்றிலும் முடங்கும். மாநில அரசுக்கு தினமும் ரூ100 கோடிக்கு வருவாய் இழப்பு ஏற்படும். மேலும், இந்த ஸ்டிரைக்கின் காரணமாக சுமார் 1 கோடி தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுவார்கள்.

இதுபற்றி மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறுகையில், “திட்டமிட்டப்படி இன்று நாடு முழுவதும் லாரி ஸ்டிரைக் தொடங்குகிறது. தமிழகத்தில் 4.50 லட்சம் லாரிகள் இயக்கப்படாது. மத்திய அரசு இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. பொதுமக்களும் எங்களது வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில், நாளை மறுநாள் (22ம் தேதி) தங்களது சொந்த வாகனங்களை இயக்காமல் நிறுத்திவைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளோம். காரணம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுங்க கட்டண உயர்வால் பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அவர்களும் எங்களுடன் சேர்ந்து எதிர்ப்பை காட்டவேண்டும். ஸ்டிரைக்கால் தினமும் மத்திய, மாநில அரசுகளுக்கு ரூ200 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்படும் என்றார்.

சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் 12 ஆயிரம் லாரிகள் ஓடாது
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் அடங்கிய பகுதியில் இன்று காலை 6 மணி முதல் சுமார் 12 ஆயிரம் லாரிகள் ஓடாது என லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்கள் ஏற்றிவரும் 800 லாரிகள் ஓடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மணல் லாரி உரிமையாளர் சங்க தலைவர் யுவராஜ் கூறுகையில், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டுவந்தால் அதன்விலை லிட்டருக்கு ரூ.15 முதல் ரூ.20 வரை குறையும். எனவே, இது ஒட்டுமொத்த மக்களின் பிரச்னை ஆகும். அதனால், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று வாகன ஓட்டிகள் யாரும் பெட்ரோல், டீசல் வாங்காமல் புறக்கணிக்க வேண்டும் என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு...