×

பொழிச்சலூர் ஊராட்சியில் குப்பை குவியலால் சுகாதார கேடு: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

பல்லாவரம்: பொழிச்சலூரில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பிரதான சாலையோரம் திறந்த வெளியில் குப்பைகளைக் கொட்டிச் செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.  பொழிச்சலூர் முதல்நிலை ஊராட்சிக்கு உட்பட்ட 15வது வார்டு பகுதியான கவுல்பசார் செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ள பாரதியார் தெருவில் குடியிருப்பு அருகே பொதுமக்கள் திறந்த வெளியில் அதிக அளவில் குப்பைகளை கொட்டிச் செல்கின்றனர். இதனால் அந்தப் பகுதியெங்கும் கடும் துர்நாற்றம் வீசிக் காணப்படுகிறது.

இவ்வாறு, திறந்த வெளியில் கொட்டப்படும் குப்பைக் கழிவுகளை அந்தப் பகுதிகளில் சுற்றித்திரியும் நாய், மாடு, பன்றி உள்ளிட்ட விலங்குகள் மேய்வதால் சாலையெங்கும் குப்பைகள் சிதறி, கடும் துர்நாற்றத்துடன் அந்த இடமே சுகாதார சீர்கேடு ஏற்பட்டுக் காணப்படுகிறது. இதனை தடுக்க வேண்டிய ஊராட்சி நிர்வாகமோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்ப்பதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘இவ்வாறு சாலைகளில் கண்ட இடங்களில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டிச் செல்வதற்கு பொழிச்சலூர் ஊராட்சி நிர்வாகம் தான் காரணம். அவர்கள் போதிய அளவில் குப்பைத் தொட்டிகளை வைத்தால் பொதுமக்களாகிய நாங்கள் ஏன் சாலையில் குப்பைகளை கொட்டப் போகிறோம்.

அவ்வாறு ஒரு சில இடங்களில் குப்பைத் தொட்டிகள் வைத்தாலும் கூட, அவைகள் ஓட்டை உடைசல்களாக சேதமடைந்த நிலையில் உள்ளன. மேலும், ஒரு சில குப்பைத் தொட்டிகளை தலைகீழாக கவிழ்த்து வைத்துள்ளனர். இப்படி வைத்துச் சென்றால் பொதுமக்கள் எவ்வாறு குப்பைகளை தொட்டிகளில் கொட்ட முடியும்.  மக்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டிய அரசே இது போன்ற அலட்சியப்போக்கை கடைபிடித்து வருவது கண்டிக்கத்தக்கது. எங்களிடம் இருந்து பெருமளவு பணத்தை வரியாக பெரும் ஊராட்சி நிர்வாகம் எங்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தருவதில் மட்டும் சுணக்கம் காட்டுவது ஏனோ என்று கேள்வி எழுப்பினர்.

கடந்தாண்டு டெங்கு நோய் பாதிப்பு மிகவும் அதிகமாக இருந்தது பொழிச்சலூர் பகுதியில் தான் என்பதை இந்த அரசு மறந்து விடக்கூடாது. எனவே, மீண்டும் அதுபோன்று ஒரு கொடிய நோய்கள் பரவுவதற்கு வழி வகுக்காமல், போதிய குப்பைத் தொட்டிகளை எங்கள் பகுதிகளில் அமைத்துத் தந்து சுற்றுப்புறத்தை பேணி பாதுகாத்து நோய்கள் பரவுவதில் இருந்து மக்களைக் காக்க வேண்டும்’’. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...