×

அறநிலையத்துறை அலட்சியத்தால் ஆலந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குளத்துக்கு பூட்டு: பக்தர்கள் வேதனை

ஆலந்தூர்: அறநிலையத்துறை அலட்சியத்தால் ஆலந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குளத்துக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. ஆலந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குளம் கடந்த 2009ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட சிறுசேமிப்பு ஊக்க நிதி திட்டத்தின் கீழ் 10.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. அப்போதைய, நகராட்சி தலைவர் ஆர்.எஸ்.பாரதி முன்னிலையில் தொழிலாளர் துறை அமைச்சராக இருந்த தா.மோ.அன்பரசன் இந்த குளத்தினை திறந்து வைத்தார். இந்த குளத்தில் படித்துறை, நடைமேடை, யானை துதிக்கையால் நீரை இறைப்பதுபோல் நீர்வீழ்ச்சி, எப்போதும் குளத்து நீர் வற்றாதவாறு அமைக்கப்பட்ட மிதவை மோட்டாருடன் கூடிய 2 போர் பம்ப் மற்றும் இரவை பகலாக்கும் 4 சோடியம் மின்விளக்குகள் போன்ற வசதிகளுடன் இந்த குளம் அமைக்கப்பட்டது.

இதனால், சுப்பிரமணியசாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் குளத்தினை சுற்றிவந்தும் படித்துறையில் அமர்ந்தும் ஒரு பொழுது போக்கு மையமாகவும் பலரும் பயன்படுத்தி வந்தனர். கடந்த 6 மாதங்களாக இந்த குளத்தை முறையாக பராமரிக்காததால், மின்மோட்டார் பழுதடைந்து நீர் வற்றி காணப்படுகிறது. பக்தர்கள், பொதுமக்கள் வருகையும் குறைந்ததால் இந்த குளம் பொலிவற்று பூட்டப்பட்டது. தற்போது, இந்த குளம் அப்பகுதி மக்களின் குப்பை தொட்டியாகவும், சமூக விரோதிகளின் புகலிடமாகவும் மற்றும் குடிமகன்களின் பாராகவும் காணப்படுகிறது. பிரசித்திபெற்ற சுப்பிரமணிய கோயில் குளத்தினை விரைவில் சீரமைத்து, பழுதடைந்த போர் பம்ப், விளக்குகள் போன்றவற்றை சீர்செய்து பழைய பொலிவினை ஏற்படுத்த இந்து அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...